புதன், 14 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: தலைவி உடன்போக்கின்போது தாயின் நிலை

தொல்காப்பிய அகத்திணை இயல்: தலைவி உடன்போக்கின்போது தாயின் நிலை

40.ஏமப் பேரூர்ச் 1சேரியுஞ் சுரத்தும்
தாமே செல்லுந் தாயரும் உளரே. (அகத். 4.)

இது, தலைமகள் உடன்போகியவழிச் செவிலிக்கு உரியதோர்திறன் உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): ஏமம் பேர் ஊர் சேரியும் - ஏமம் பொருந்திய பெரிய ஊரகத்துச் சேரியின்கண்ணும், சுரத்தும் - ஊரினின்றும் நீங்கிய சுரத்தின்கண்ணும் , தாமே செல்லும் தாயரும் உளர் - தாமே செல்லுந் தாயரும் உளர்.

2"தாமே செல்லுந் தாயர்" என்பதனால் செவிலி என்பது பெற்றாம்; 'தாயரும் ' என்றதனால் கைத்தாயர் பலர் என்று கொள்ளப்படும். அவ்வழிச் சேரியோரை வினாதலும், சுரத்திற் கண்டோரை வினாதலும் உளவாம். சேரியிற் பிரிதலும் பாலையாகுமோ எனின். அது வருகின்ற சூத்திரத்தினால் விளங்கும். [ஈற்றேகாரம் அசை.]

சேரியோரை வினாஅயதற்குச் செய்யுள்:

3"இதுஎன் பாவைக் கினியநன் பாவை
இதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி
இதுவென் பூவைக் கினியசொற் பூவையென்று
அலம்வரு நோக்கி னலம்வரு சுடர்நுதல்
காண்தொறுங் காண்தொறுங் கலங்கி
நீங்கின ளோவென் பூங்க ணோளே" (ஐங்குறு-375)

என வரும்.

சுரத்திடை வினாஅயதற்குச் செய்யுள்:

"எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை யந்தணீர்
வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர் இவ்விடை
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனுந்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும" (கலி-பாலை -8).

" செய்வினைப் பொலிந்த செறிகழல் நோன்தாள்
மையணற் காளயொடு பைய இயலிப்
பாவை அன்னஎன் ஆய்தொடி மடந்தை
சென்றனள் என்றிர் ஐய
ஒன்றின வோஅவள் அஞ்சிலம் படியே" (ஐங்குறு-389).

என வருவதும் அது.

" காலே பரிதப் பினவே 4கண்ணே
நோக்கி நோக்கி வாள்இழந் தனவே
அகல்இரு விசும்பின் மீனினும்
பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே" (குறுந்-44).

என வருவது, சுரத்திடை வினாஅயது நிகழ்ந்த பின்னர்க் கூறியது. (அகத். 40).

குறிப்பு விளக்கம்

1. ஏமப் பேரூர் - பதியெழுவறியாப் பேரூர்.

2. "தாயர்" எனப் பன்மைகூறித் 'தாமே' எனப் பிரித்ததனால் சேரிக்கு நற்றாய் சேறலும், சுரத்திற்குச் செவிலித்தாய் சேறலும் புலனெறி வழக்கிற்குச் சிறந்ததென்று உணர்க.

3. (பாடவேறுபாடு): இதுவென் பாவை பாவை யிதுவென்
அலமரு நோக்கின் அலம்வரு சுடர்நுதல்
பைங்கிளி யெடுத்த பைங்கிளி என்றிவை
காண்தொறும் காண்தொறும் கலங்க......

4. பின என்.


கருத்துகள் இல்லை: