வியாழன், 22 அக்டோபர், 2015

குறுந்தொகையும் நானும்

       குறுந்தொகைக்கும் எனக்குமான தொடர்பினை நினைத்துப் பார்க்கின்றேன். பள்ளி நாட்களில் குறுந்தொகைப் பாடல்களைப் படித்திருந்தாலும் அவற்றின் சுவையை உணர்ந்து கொள்ள அந்த வயது இடமளிக்கவில்லை. கல்லூரிப் பருவத்தில்தான் அப்பாடல்களின் சிறப்பை ஒருவாறு உணரத் தொடங்கினேன். அதன் பின்னர் குறுந்தொகை என் உள்ளத்தையும் உயிரையும் பிணித்துக் கொண்டது. என்னுடைய முனைவர்ப் பட்ட ஆய்வுக்காலம் குறுந்தொகையை முழுமையாக நான் ஆர அருந்திய காலம். அதன் பின்னர்க் குறுந்தொகை என் வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிப்போனது. குறுந்தொகையிலே தோய்ந்துபோன நான் இன்னும் அதிலேயே ஆழ்ந்து கிடக்கின்றேன். மீளவும் எனக்கு விருப்பமில்லை.

      குறுந்தொகை ஆய்வு இயல்புகள் என்னும் பொருளில் பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்கள் செய்த ஆய்வுத் திட்டம் பின்னாளில் சில சேர்க்கைகளோடு, பெரியாரிய நோக்கில் குறுந்தொகை என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. அந்நூல் குறுந்தொகை பற்றிய ஆய்வுகள், நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தொகுத்துக் காட்டிய முதல் நூல். அந்நூலின் கருத்துப்படி 1915 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரை வெளிவந்துள்ள குறுந்தொகைக் கட்டுரைகளின் எண்ணிக்கை 429 ஆகும். அக்கட்டுரைகளில் 21 கட்டுரைகள் என்னால் எழுதப்பட்டவை. அந்நூலின் மூன்றாம் இணைப்பில் பொருண்மை அடிப்படையில் குறுந்தொகை நூல்களும் கட்டுரைகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கட்டுரை வகைகளாகப் பதினோரு வகைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள், ஏழு வகைகளில் என்னுடைய கட்டுரைகள் அமைந்துள்ளன. இவ்வுண்மைகளை எனக்கு உணர்த்திய அந்நூலுக்கும் பேராசிரியர் இரா. அறவேந்தன் அவர்களுக்கும் என் நன்றி. இப்படிக் குறுந்தொகை பற்றியே நாளும் சிந்தித்து வரும் நான் குறுந்தொகை உரைநெறிகள், குறுந்தொகைத் திறனுரைகள் ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளேன். 

      1984இலில் மு. சண்முகம் பிள்ளையின் குறுந்தொகைப் பதிப்பின் முன்னுரையில் குறிக்கப்பட்டு, அதன் பின்னர் எந்தக் குறிப்பும் இல்லாதுபோன குறுந்தொகையின் முதல் பதிப்பாகிய திருக்கண்ணபுரத் தலத்துத் திருமாளிகைச் சௌரிப் பெருமாள் அரங்கனின் பதிப்பைக் கண்டெடுத்துத் தமிழ் உலகிற்கு மீண்டும் அறிமுகம் செய்தேன். அப்பதிப்பைத் தந்து உதவியவர் மதுரை யாதவர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கோ. செகநாதன் அவர்கள். அதனைத் தொடர்ந்து அப்பதிப்பினைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகின்றேன். குறுந்தொகை தொடர்பான கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றைச் சேகரிப்பதும் என் வழக்கமாகிப் போனது. அருளாளர்கள் கூறியதுபோலச் ’சிக்கெனப் பற்றினேன் இனி எங்கு எழுந்து அருளுவது இனியே’ என்றவாறு அமைந்துபோனது எனக்கும் குறுந்தொகைக்குமான உறவு.  

       குறுந்தொகைப் பதிப்புக்களில் முதல் பதிப்பாகிய அரங்கனார் பதிப்பிலும், திருப்புமுனைப் பதிப்பாகிய உ.வே.சாமிநாதையர் பதிப்பிலும், சாமிநாதையர் பதிப்புக்கு மேலாய்வுப் பதிப்பாக அமைந்த இரா. இராகவையங்கார் உரையின் மீதும் எனக்கு அளவிறந்த காதல் உண்டு. உ.வே.சாமிநாதையரின் ஐம்பதாண்டு கால உழைப்பின் பயனாக விளைந்த குறுந்தொகைப் பதிப்பும் உரையும் இனி வரும் பகுதிகளில் சிறுசிறு பகுதிகளாகத் தரப்பட உள்ளன. யான் பெற்ற இன்பம் பெறுக இவ் இணைய உலகம். 

கருத்துகள் இல்லை: