புதன், 14 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்:தோழி கூற்றுக்கள்

தொல்காப்பிய அகத்திணை இயல்:தோழி கூற்றுக்கள்

42. தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்
வாய்மையும் பொய்மையுங் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சுகலுழ்ந் தோளை
அழிந்தது களையென மொழிந்தது1 கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு
என்றிவை எல்லாம் இயல்புற நாடின்
ஒன்றித் தோன்றுந் தோழி மேன. (அகத்.42)

இது, பிரிவின்கண் தோழிக்குக் கூற்று நிகழும் இடம்உண்ர்த்துல் நுதலிற்று.

(இதன் பொருள்): தலைவரும் விழும..... தோழி மேன - தலைவரும் விழும நிலையெடுத் துரைத்தல் முதலாகச் சொல்லப்பட்டன தோழிமாட்டுப் பொருந்தித் தோன்றும்.

தலைவரும் விழுமநிலை எடுத்துரைத்தலாவது பின்பு வரும் நோய் நிலையை எடுத்துக் கூறுதல் என்றவாறு.

உதாரணம்:

"பாஅல் அஞ்செவிப் பணைத்தாள் மாநிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறதர்ப் பட்ட ஆறுமயங் கருஞ்சுரம்
இறந்துநீர் செய்யும் பொருளினும்யாம் நுமக்குச்
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்
நீள்இரு முந்நீர் வளிகலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக்
கேள்பெருந் தகையோடு எவன்பல மொழிகுவம்
நாளுங் கோள்மீன் தகைத்தலுந் தகைமே;
கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின்
புல்லென்ற களம்போலப் புலம்புகொண்டு அமைவாளோ;
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற, நாடுபோல்
பாழ்பட்ட முகத்தொடு பைதல்கொண்டு அமைவாளோ;
ஓரிரா வைகலுள் தாமரைப் பொய்கையுள்
நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ;
எனவாங்கு,
பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு
எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வது
அந்நாள்கொண்டு இறக்கும்இவள் அரும்பெறல் உயிரே" (கலி. பாலை. 4)

எனவரும். இதனுள் "யாம் நுமக்குச் சிறந்தனமாதல் அறிந்தனிராயின்" என்றமையாலும், "பொய்ந் நல்கல் புரிந்தனை" என்றமையாலும் வரைவதன் முன்பென்று கொள்ளப்படும். இவள் இறந்துபடும் என்றமையால் உடன்கொண்டு போவது குறிப்பு.
போக்கற்கண்ணும் என்பது ' உடன்கொண்டு பெயர் ' என்று கூறுதற்கண்ணும் என்றவாறு.

உதாரணம்:

" மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறா அத் தடுமாற்று அருந்துயரம்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்
என்நீர் அறியாதீர் போல இவைகூறல்
நின்னீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ வெமக்கு " (கலி. பாலை. 5)

என வரும்.

விடுத்தற்கண்ணும் என்பது தலைமகன் உடன்போக்கொருப் பட்டமை தலைமகளுக்குக் கூறி அவளை விடுத்தற்கண்ணும் என்றவாறு.

உதாரணம்:

" உளனங் கொள்கையொடு உளங்கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரஞ் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரியம் பெண்டிர் கவ்வையும் ஒழிகம்
நாடுகண் அகற்றிய உதியஞ் சேரல்
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவவினி வாழி தோழி அவரே
பொம்மல் ஓதி நம்மொடு ஓராங்குச்
செலவயர்ந் தனரால் இன்றே மலைதொறும்
மால்கழை பிசைந்த நூல்வாய் கூரெரி
மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர்
வான்றோய் புணரி மிசைக்கண் டாங்கு
மேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச்சென் றன்ன
கல்லூர்பு இழிதரும் புல்சாய் சிறுநெறிக்
காடுமீக் கூறுங் கோடேந்து ஒருத்தல்
ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம் பணைத்தோள்
நாறைங் கூந்தல் கொம்மை வரிமுலை
நிரையிதழ் உண்கண் மகளிர்க்கு
அரிய வாலென அழுங்கிய செலவே" (அகநா. 65)

என வரும். இஃது உடன்போக்கு நயப்பித்தது.

"வேலும் விளங்கின வினைஞரும்4 இயன்றனர்
தாருந் ததையின தழையுந் தொடுத்தன
நிலநீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல்நீர் தலைஇய உலவையிலை நீத்துக்
குறுமுறி யீன்றன மரனே நறுமலர்
வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன்
தேம்படப் பொதுளின பொழிலே கானமும்
நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாள்
பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப்
போதுவந் தன்று தூதே நீயும்
கலங்கா மனத்தை ஆகி என்சொல்
நயந்தனை கொண்மோ5 நெஞ்சமர் தகுவி
தெற்றி உலறினும் வயலை வாடினும்
நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும்
நின்னினும் மடவள் நனிநின் நயந்த
அன்னை அல்லல் தாங்கிநின் ஐயர்
புலிமருள் செம்மல் நோக்கி
வலியாய் இன்னுந் தோய்கநின் முலையே" (அகநா. 259)

எனவரும். இது விடுத்தவழிக் கூறியது.

நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் என்பது, தமரை நீக்குதலால் தமக்குற்ற நோயின்கண்ணும் என்றவாறு.

உதாரணம்:

"விளம்பழங் கமழும் கமஞ்சூல் குழிசிப்
பாசந் தின்ற தேய்கால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்
அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்
வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள்
இவைகாண் தோறும்நோவர் மாதோ
அளியரோ அளியர்என் ஆயத் தோர்என
நும்மொடு வரவுதான் அயரவும்
தன்வரைத்து அன்றியுங் கலுழ்ந்தன கண்ணே" (நற். 12)

என வரும். இஃது உடன்போக்குத் தவிர்தற்பொருட்டுக் கூறியது.
இன்னும், "நீக்கலின் வந்த தம்முறு விழுமம் " என்றதனால் தலைமகட்குக் கூறினவும் கொள்க.

உதாரணம்:

" நாளும் நாளும் ஆள்வினை அழுங்க
இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையால் புகழென
ஒண்பொருட் ககல்வர்நங் காதலர்
கண்பனி துடையினித் தோழி நீயே " (சிற்றட்டகம்)

என வரும்.

வாய்மையும் பொய்ம்மையும் கண்டோற் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் என்பது, மெய்ம்மையும் பொய்ம்மையும் காணப்பட்ட அவனைச் சுட்டித் தாய்நிலை நோக்கி மீட்டுக்கொள்ளுதற் கண்ணும் என்றவாறு.

உதாரணம்:

"பால்மருள் மருப்பின் உரல்புரை பாவடி
ஈர்நறுங் கமழ்கடா அத்து இனம்பிரி ஓருத்தல்
ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து
பொருள்வயின் பிரிதல் வேண்டும் என்னும்
அருளில் சொல்லும் நீ சொல் லினையே
நன்னார் நறுநுதல் நயந்தனை6 நீவி
நின்னிற் பிரியலேன் அஞ்சல்ஓம் பென்னும்
நன்னர் மொழியும் நீமொழிந் தனையே
அவற்றுள்,
யாவோ வாயின மாஅல் மகனே
கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான்
பழவினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்
அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின்னின்று
இமைப்புவரை வாழாள் மடவோள்
அமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே " (கலி. பாலை. 20)

என வரும்.

இது தலைமகனைச் சுட்டிக் கூறியது. தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொண்டதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க.

'நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை, அழிந்தது களையென மொழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு,என்றிவை எல்லாம் இயல்பு நாடின், ஒன்றித் தோன்றும் தோழிமேன என்பது, தலைமகன் பிரிதலால் வந்துற்ற நோய் மிகவும் பெருகித் தன் நெஞ்சு கலங்கியோளை அழிந்தது களைதல் வேண்டுமெனத் தலைமகன் சொன்ன மாற்றத்தைக் கூறி வன்புறையின் பொருட்டு நெருங்கி வந்ததன் திறத்தோடு இத்தன்மைய வெல்லாம் இயல்பு ஆராயின் தலைமகளொடு பொருந்தித் தோன்றும் தோழி மேலன என்றவாறு.

" ஒன்றித் தோன்றுந் தோழி " என்றதனால் தோழிமார் பலருள்ளும் இன்றியமையாதாள் என்று கொள்க.

" தோழி தானே செவிலி மகளே " (களவியல் - 35) என்றதனான், அவள் செவிலிமகள் என்று கொள்ளப்படும்.

மொழிந்தது கூறி வன்புறை நெருங்குதலாவது, தலைமகன் மொழிந்தது கூறி வற்புறுத்தலாம்.

"அரிதாய அறன்எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலின் புணர்ச்சியும் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர்
வருவர்கொல் வயங்கிழா அய் வலிப்பல்யான் கேஎள்இனி

அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனங்குழா அய் காடென்றார் அக்காட்டுள்
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே;"

எனவும்,

"இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீய்ந்த உலவையால்
துன்புறூஉந் தகையவே காடென்றார் அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறக ரால்ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே;"

எனவும்,

கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
துன்னரூஉந் தகையவே காடென்றார் அக்காட்டுள்
இன்நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவும் உரைத்தனரே;

எனவும் அவன் மொழிந்தது கூறி,

"எனவாங்கு;
இனைநலம் உடைய கானஞ் சென்றோர்
புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்
பல்லியும் பாங்கொத்து இசைத்தன
நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே " (கலி - பாலை -11)

என வற்புறுத்தியவாறு கண்டுகொள்க.

"என்றிவை எல்லாம் இயல்புற நாடின் " என்றதனான், பருவம் வந்தது எனவும் பருவம் அன்று எனவும் வருவன கொள்க.

" வல்வருவர் 7காணாய் வயங்கி முருக்கெல்லாம்
செல்வச் சிறார்க்குப்பொன் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேற் பொற்றாலி பாய்த்தித்
திவனக்கான் றிட்டன தேர்ந்து. " (திணைமாலை நூற் - 66)

இது பருவம் வந்தது என்றது.

" மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங்கு அத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே. " (குறுந் - 66)

இது பருவம் அன்று என்றது.

இன்னும் ' என்றிவை எல்லாம் ' என்றதனால், பிரியுங்காலத்துத் தலைமகட்கு உணர்த்துகின்றேன் எனத் தலைமகற்கு உரைத்தலும், தலைமகட்கு அவர் பிரியார் எனக் கூறுதலும் கொள்க.

"முளவுமா 8வல்சி எயினர் தங்கை
இளமா எயிற்றிக்கு நின்நிலை அறியச்
சொல்லினேன் இரக்கும் அளவை
வென்வேல் காளை 9விரையா தீமே. " (ஐங்குறு - 364)

இது விலக்கிற்று.

"விலங்கல் விளங்கிழாஅய் செல்வாரோ அல்லர்
அழற்பட் டசைந்த பிடியை - எழிற்களிறு
கற்றடைச் செற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண்டு
உச்சி யொழுக்குஞ் சுரம். " (ஐந்திணை ஐம் -32)

இது தலைமகட்குக் கூறியது. (அகத். 42)

குறிப்பு விளக்கம்

(பாடவேறுபாடு): 1. களைஇய ஒழிந்தது.

(பாடவேறுபாடு): 2. அவரோ.

(பாடவேறுபாடு): 3. மிசைந்த.

4. வினையரும்.

5. கேண்மோ.

(பாடவேறுபாடு): 6. நயந்தெமை.

(பாடவேறுபாடு): 7. வல்வரும்.

8. முளமா.


9. விடலை.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...