ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: மரபுநிலை திரியக் கூடாது

தொல்காப்பிய அகத்திணை இயல்: மரபுநிலை திரியக் கூடாது

48.மரபுநிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும் என்ப.(அகத். 48)

இதுவும் அது.(இதுவும் பாலைக்கு நினைத்தற்கு மரபு உணர்த்துதல் நுதலிற்று).

(இதன் பொருள்): மரபு நிலை திரியா மாட்சிய ஆகி விரவும் பொருளும் விரவும் என்ப - மரபுநிலை திரியாத மாட்சிமையுடையவாகி விரவும் பொருளும் விரவும் என்ப.

அஃதாவது பாலைக்கு ஓதிய பாசறைப் புலம்பற்கண்ணும், தேர்ப்பாகற்குக் கூறுதற்கண்ணும் முல்லைக்குரிய முதற்பொருளும் கருப்பொருளும் விரவுதலாம். இந்நிகரான பிறவுங் கொள்க.

மரபுநிலை திரியாமையாவது, பாசறைக்கண் வினை முடித்த வழிக் கார்காலம் வந்ததாயின் ஆண்டுக் கூறும் கூற்று. அஃது அக்காலத்தைப் பற்றி வருதலின் மரபு நிலை திரியாதாயிற்று.

உதாரணம்:

"வேந்து வினை முடித்த " என்னும் அகப்பாட்டினுள் (14) கண்டு கொள்க.

இன்னும் " மாட்சியஆகி விரவும் பொருளும் விரவும் " என்றதனால் பாசறைக்கண் தூது கண்டு கூறுதலும், தலைமகளை இடைச்சுரத்து நினைத்துக் கூறுதலுங் கொள்க.

உதாரணம்:

"நீடினம் என்று கொடுமை தூற்றி
வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்து
யாம்வெங் காதலி நோய்மிகச் சாஅய்ச்
சொல்லியது உரைமதி நீயே
முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே." (ஐங்குறு - 478)

இது தூது கண்டு கூறியது.

"பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்
துனிமலி துயரமோ டரும்பட ருழப்போள்
கையறு நெஞ்சிற்கு உசாஅத்துணை 1யாகச்
சிறுவரைத் தங்குவை யாயின்
காண்குவை மன்னாற் பாணவெந் தேரே"

இது தூது விடும் தலைமகன் கூறியது.

"நெடுங்கழை முளிய வேனில் நீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்
வெய்ய ஆயின முன்னே இனியே
ஒண்ணுதல் அரிவையை உள்ளுதொறும்
தண்ணிய ஆயின சுரத்திடை ஆறே." (ஐங்குறு - 322)

இஃது இடைச்சுரத்துக் கூறியது. (அகத். 48).

குறிப்பு விளக்கம்

1.குயவுத்துணை.


கருத்துகள் இல்லை: