ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: ஏனை உவமம் திணை உணர்த்தும் முறை

தொல்காப்பிய அகத்திணை இயல்: ஏனை உவமம் திணை உணர்த்தும் முறை

52. ஏனை உவமம் தானுணர் வகைத்தே.(அகத். 52)

இஃது, ஏனை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): ஏனை உவமம் தான் உணர் வகைத்து - உள்ளுறை யொழிந்த உவமம் தான் உணரும் வகையான் வரும்.

தான் உணரும் வகையாவது, வண்ணத்தானாதல் வடிவானாதல் பயனானாதல் தொழிலானாதல் உவமிக்கப்படும் பொருளொடு எடுத்துக் கூறுதல். [ஏகாரம் ஈற்றசை].

அது வருமாறு உவமவியலுட் கூறப்படும்.

இதனால் திணை உணருமாறு;

"வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழில்
முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறிநீ செய்தனை யென்ப அலரே
குரவ நீள்சினை உறையும்
பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே." (ஐங்குறு. 369)

இஃது ஊடற் பொருண்மைத்தேனும், வேனிற்காலத்து நிகழும் குயிற்குரலை உவமித்தலிற் பாலைத்திணையாயிற்று. குரவம் - குராமரம்.

"உரைத்திசிற் றோழியது புரைத்தோ அன்றே
துருக்கங் கமழும் மென்தோள்
துறப்ப என்றி இறீஇயர்என் உயிரே." (சிற்றட்டகம்)

இது துருக்கம் என உவமை கூறுதலாற் குறிஞ்சியாயிற்று. (அகத். 52)


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...