சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: திணைக்கு உரிய உரிப்பொருள்கள்

தொல்காப்பிய அகத்திணை இயல்: திணைக்கு உரிய உரிப்பொருள்கள்

16. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் 1அவற்றின் நிமித்தம் என்றிவை
2தேருங் காலைத்திணைக்குரிப் பொருளே. (அகத். 16)

இஃது, உரிப்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் அவற்றின் நிமித்தம் என்று இவை - புணர்தலும், பிரிதலும், இருத்தலும், இரங்கலும், ஊடலும் அவற்றின் நிமித்தமும் என்று சொல்லப்பட்ட இவை, தேரும் காலை திணைக்கு உரிப்பொருள் - ஆராயுங்காலத்து ஐந்திணைக்கும் உரிப் பொருளாம்.

பிரிவு பாலைக்கு உரித்தாமாறு மேற்சொல்லப்பட்டது. 'ஏனைய மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல் ' (மரபு.110). என்னும் தந்திர உத்தியால், புணர்தல் என்பது குறிஞ்சிக்கும், இருத்தல் என்பது முல்லைக்கும், இரங்கல் என்பது நெய்தற்கும், ஊடல் என்பது மருதத்திற்கும் பெரும்பான்மையும் உரித்தாகவும் சிறுபான்மை எல்லாப்பொருளும், எல்லாத்திணைக்கும் உரித்தாகவும் கொள்ளப்படும். இருத்தலாவது, தலைமகன் வருந்துணையும் ஆற்றியிருத்தல்; இரங்கலாவது ஆற்றமை; என்று என்பது எண்ணிடைச்சொல். ஏகாரம் ஈற்றசை. (அகத். 16).

குறிப்பு விளக்கம்

(நூற்பாப் பாடவேறுபாடு) 1. இவற்றின். (நச்சி.)


2. தேருங்காலை என்றதனாற் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்குப் பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தற்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் அவ்வந் நிமித்தங்களும் உரித்தென்று ஆராய்ந்துணர்க.(நச்சி.)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...