ஞாயிறு, 25 அக்டோபர், 2015

குறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 6)

                                    குறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 6)



பதிப்பு
குறுந்தொகைச் செய்யுட்களுக்கு உரை எழுதுகையில் பிற சங்க நூற் செய்யுள் போக்கையும் இலக்கண இலக்கியங்களில் உரையாசிரியர்கள் புலப்படுத்திச் செல்லும் மரபுகளையும் இயன்ற வரையில் உணர்ந்து எழுதலானேன். உரைகளில் உரையாசிரியர்கள் இந்நூலில் இருந்து மேற்கோள் காட்டும் செய்யுட்களுக்குச் சில இடங்களில் உரை எழுதி இருக்கிறார்கள். அவை எனக்குப் பெருந்துணையாக இருந்தன.
இப்பதிப்பில் நான் மேற்கொண்ட சில முறைகளை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
    1. கூற்று:
 ஒவ்வொரு செய்யுளும் இன்னாருடைய கூற்று என்பதைத் தலைப்பில் அமைத்திருக்கின்றேன். திணைப் பெயரைத் தலைப்பிலிடுதல் அகநானூற்றிற் கண்டதாயினும் பொருளில் கருத்துச் செல்வதற்கு இம்முறை தக்கதென்று தோற்றியது. அன்றியும், தொல்காப்பியத்தில் கூற்று வகையாகச் சூத்திரங்கள் வகுக்கப்பட்டிருத்தலும் இங்ஙனம் அமைக்கும் கருத்தை உண்டாக்கியது. சில செய்யுட்களில் இரண்டு பழைய கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றில் முதற் கருத்தின்படியே கூற்று அமைக்கப்பட்டது.
    2. கூற்று விளக்கம்:
இது, பழைய கருத்தையும் செய்யுட் பொருளையும் இணைத்துச் சுருக்கமாக வரையப்பட்டது. இரண்டு கருத்துள்ள இடங்களில் முதற் கருத்துக்கே இவ்விளக்கம் எழுதப்பட்டது .
    3. மூலம்:
ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பொருட் சிறப்புடையபாடங்களையே கொடுத்திருக்கிறேன்.
    4. பிரதி பேதம்:
ஏட்டுச் சுவடிகளாலும், உரையாசிரியர்கள் உரைகளில் காட்டிய மேற்கோள் பகுதிகளாலும் தெரிந்த பாடங்களுள் முக்கியமானவை அடிக்குறிப்பில் காட்டப்பெற்றன. ஏனையவை தனியே தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல மிகவும் பிழை உள்ளனவாக இருப்பினும் பழைய நூல்களில் நம் நாட்டவர்களுக்கு இடைக்காலத்தே இருந்த புறக்கணிப்பை நன்கு வெளிப்படுத்தும். பொருள் வரையறை செய்யாமல் உள்ளதை உள்ளபடியே பிரதி செய்து வந்தவர்கள் ஓர் எழுத்தை மற்றோர் எழுத்தாகக் கொண்டு எழுதி விட்டதனாலும் தெரியாத இடங்களில் தாமே ஊகித்துப் புதியனவாக எழுதிச் சேர்த்து விட்டமையாலும் உண்டான மாறுபாடுகள் அளவில. பழம் பிரதிகளில் ஈகார ஏகாரங்களின் பின்னர் யகரவொற்று எழுதப்பட்டிருந்தது. ஆய்த எழுத்தை எழுத வேண்டிய இடத்தில் குகரம் எழுதப்பட்டிருந்தது. சில இடங்களில் இவ்விரண்டுமே காணப்படும். மகர ழகரங்கள், ழகர ளகரங்கள், ககர சகர தகரங்கள், தந்நகர றன்னகரங்கள், லகர வகரங்கள், ரகர றகரங்கள் என்பவை ஒன்றுக்கொன்று மாறாக எழுதப்பட்டிருக்கும். டு, ரு, கு என்பனவும் , கு, சு என்ற மூன்றும் தமக்குள் வேற்றுமை தெரியாதபடி இருந்தன. ‘ற்றஎன வரும் இடங்களில்த்தஎன்ற பாடம் காணப்பட்டது. ஓரிடத்தில் காசினை என்பதில்காஎன்னும் எழுத்து, ‘தூஎன மாறி அதன்பின் ஒரு சகர ஒற்றுத் தோன்றித் தூச்சினை என்று எழுதப்பட்டிருந்தது. இங்ஙனம் பல பிரதிகளிலும் காணப்பட்ட பாடங்களையும் அவற்றின் மாறுபாட்டின் வரலாற்றையும் விரிக்கின் மிகப் பெருகும்.
    5. பழைய கருத்து:
கருத்தில் பொருத்தம் இல்லாத சொற்கள்நகவளைவுக்குள் அமைக்கப்பட்டன. இதில் உள்ள சில கடினமான சொற்களுக்குப் பொருள் இருதலைப் பகரத்துள் அமைக்கப்பட்டிருக்கின்றது. சில செய்யுட்களுக்கு இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன.
    6. ஆசிரியர் பெயர்கள்:
சுவடிகளில் இருந்தவாறே இப்பெயர்கள் அமைக்கப்பெற்றன.
    7. பதவுரை :
அந்வயப்படுத்திப் பொருள் விளக்குதற்குரிய சொற்களைப் பெய்து பதவுரை எழுதப்பட்டுள்ளது; பல இடங்களில் விளி முன்னத்தால் வருவித் தெழுதப்பட்டது. சில செய்யுட்களுக்கு ஒருவாறு உரை எழுதினும் முடிபு முதலியன தெளிவாக இன்மையின் என் மனத்திற்குத் திருப்தி உண்டாகவில்லை.
    8. முடிபு :
வினை முடிபு இத்தலைப்பிற் காட்டப்பட்டது.
    9. கருத்து:
 செய்யுளின் கருத்துச் சுருக்கமாக எழுதப்பட்டது.
    10. விசேட உரை :
 பதசாரங்களும், இலக்கணச் செய்திகளும், பொருள் விளக்கங்களும், வரலாறுகளும் இப்பகுதியில் எழுதப்பட்டுள்ளன. உள்ளுறையுவமம், இறைச்சி என்னும் இரண்டும் குறிப்பெனவே குறிக்கப்பட்டுள்ளன.
    11. மேற்கோளாட்சி:
இலக்கண இலக்கியங்களின் உரைகளில் உரையாசிரியர்கள் இந்நூற் செய்யுட்களையும் செய்யுட் பகுதிகளையும் காட்டிய இடங்கள் அடிவரிசைப்படி வகுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவை தெரிந்த வரையில் உரையாசிரியர்களின் காலமுறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் உரையாசிரியர்களுடைய கருத்துக்கள் அடிக்குறிப்பில் விளக்கப்பட்டன.
    12. ஒப்புமைப் பகுதி:
இந்நூற் செய்யுட்களின் சொற் பொருளோடு ஒப்புமையை உடைய பிறநூற் செய்யுட்களும் செய்யுட் பகுதிகளும் ஒப்புமைப் பகுதியென்னும் தலைப்பில் காட்டப்பட்டன. இதில் பெரும்பாலும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சிந்தாமணி என்னும் நூல்களின் பகுதிகளே காணப்படும். கருத்தை நன்கு விளக்குவனவாகிய பிற்காலத்து நூற்பகுதிகள் சிறுபான்மையாகவே இருக்கும். இவ்வொப்புமைப் பகுதி சங்க நூற்பொருள்களை ஆராய்வாருக்குப் பெரிதும் பயன்படும். பாடங்களை நிச்சயம் செய்வதற்கு இவ்வொப்புமைப் பகுதிகள் சிலவிடங்களில் உதவின. இதில் காட்டப்பட்ட செய்யுட்பகுதி குறுந்தொகைச் செய்யுளை இயற்றிய புலவரால் பாடப்பெற்றதாக இருப்பின் அங்கே உடுக்குறியிட்டுக் கீழ்க்குறிப்பில் இன்னார் பாட்டென்று காட்டப்பட்டுள்ளது.
            நூலின் மூலமும் உரையும் அடங்கிய பகுதிகள் மேலே கண்ட முறையில் வகைப்படுத்திப் பதிப்பிக்கப்பட்டன. நூலிற்கு அங்கமாகச் செய்யுள் முதற்குறிப்பகராதியும், அரும்பத முதலியவற்றின் அகராதியும் நூலின் பின்னே சேர்க்கப்பட்டன.
            இம் முகவுரையின் பின்னே நூல் ஆராய்ச்சியும் ஆசிரியர் பெயர் அகராதியும், பாட பேதங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாராய்ச்சியில் இந்நூலால் அறிந்த பலவகைச் செய்திகளையும் பண்டைக் காலத்துத் தமிழ் மரபுகளையும் வேறு பலவற்றையும் காணலாம். இந்நூல் செய்யுட்களைப் பாடிய புலவர்களின் சரித்திரத்தைப் புறநானூறு முதலிய பதிப்புக்களில் எழுதி இருப்பது போல எழுத எண்ணி இருந்தேன். அப் பதிப்புக்களில் எழுதிய பிறகு நான் செய்துவந்த ஆராய்ச்சியினால் தெரிந்த செய்திகள் பல. அவற்றையும் அமைத்துப் புலவர் சரித்திரங்களைத் தனியே வெளியிட எண்ணியிருத்தலின் இந்நூலில் ஆசிரியர் வரலாறுகளை எழுதாமல், அவர்கள் பெயர்களையும் அவர்கள் இயற்றிய செய்யுள் எண்களையும் மாத்திரம் காட்டியிருக்கின்றேன். முதலில் நான் கருதியபடி இல்லாமல் பல புதிய விஷயங்களைச் சேர்க்க நேர்ந்தமையின் எதிர் பார்த்ததைவிட அதிக காலம் இப்பதிப்புக்கு ஆயிற்று.
உதவிய அன்பர்கள்
             இந்நூலை ஆராய்ந்து வந்த காலங்களிலும் பதிப்பித்த காலத்திலும் பல அன்பர்களுடைய உதவியைப் பெற்றிருக்கின்றேன். அவர்களுள் முக்கியமானவர்கள் என்னுடைய இளைய சகோதரர் சிரஞ்சீவி வே. சுந்தரேசையரும், சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி. மு. சுப்பிரமணிய ஐயரும், சிரஞ்சீவி வித்துவான் கி.வா. ஜகந்நாதையரும் ஆவர்.
      முன்பு குறிப்பிட்ட என் பிராய முதிர்ச்சியாலும் சரீரத் தளர்ச்சி முதலியவற்றாலும் முன்பு போல எந்தக் காரியத்தையும் நான் கருதியபடி தனியே இருந்து நிறைவேற்ற இயலவில்லை. ஆயினும் தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தலில் உள்ள ஆவல் இன்னும் தணியவில்லை. தமிழ்த்தெய்வமே அவ்வப்பொழுது என் கவலையை நீக்கி வருவதாக எண்ணுகின்றேன். கலா நிலையமாகிய சென்னைச் சர்வகலாசாலையாருடைய பேராதரவால் வெளிவரும் இந்நூற் பதிப்பு, தமிழன்பர்கள் எதிர்பார்க்கிறபடி திருப்திகரமாக அமைய வேண்டுமே என்ற கவலை எனக்கு உண்டு. இச்சமயத்தில் மேற்கூறிய வித்துவான் சிரஞ்சீவி கி.வா. ஜகந்நாதையர் இந்நூலுக்கு நான் பல வருஷங்களாக எழுதியும் தொகுத்தும் வைத்துள்ள பல வகையான ஆராய்ச்சிக் குறிப்புக்களை எல்லாம் என் கருத்துக்கிணங்க முறைப்படுத்தி நல்ல வடிவத்தில் அழகு பெற அமைப்பதில் பெரிதும் துணை புரிந்தார். அவருடைய பேராற்றலையும் எழுதும் வன்மையையும் தமிழ் அன்பையும் என் மனமாரப் பாராட்டுகின்றேன். அவருக்கு எல்லா நன்மைகளையும் அளித்தருளும் வண்ணம் தோன்றாத் துணையாக நிற்கும் முழுமுதற் கடவுளை இறைஞ்சுகின்றேன்.
             பல வருஷங்களாக முயன்று படித்துப் பலருடைய உதவியைப் பெற்று ஆராய்ந்து ஆராய்ந்து சுவைத்துப் பார்த்த இந்நூல் இப்பொழுது இந்த உருவத்தில் வெளி வருவதைப் பார்க்கையில் எனக்கு உண்டாகும் இன்பம் எழுதி உணர்த்தற்கரியது. தமிழ் அன்னையின் திருவடித் துணைகளில் இப்பதிப்பும் ஒரு மணமற்ற சிறு மலராகவேனும் கிடந்து நிலவும் என்பது எனது கருத்து.
             எனக்குள்ள பல வகையான குறைகளால் இப்பதிப்பில் பல பிழைகள் நேர்ந்திருத்தல் கூடும். அவற்றை அன்பர்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்று எண்ணுகிறேன். இம் முயற்சியை நிறைவேற்றி வைத்த திருவருளை வழுத்தி வாழ்த்துகின்றேன்.
தியாகராஜ விலாசம்”                                                                     இங்ஙனம்,
 திருவேட்டீசுவரன் பேட்டை                                               வே. சாமிநாதையர்       

 12-8-1937.                  
(முன்னுரை நிறைவு பெற்றது)                      

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...