புதன், 7 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணையியல் மூன்றாம் நூற்பா – அகப்பாடலின் சிறந்த கூறுகள்

அகத்திணையியல் மூன்றாம் நூற்பா – அகப்பாடலின் சிறந்த கூறுகள்

3.    முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை (அகத். 3)

இது, மேற்சொல்லப்பட்ட நடுவண் ஐந்திணை ஆமாறும், ஒரு வகையான் உலகத்துப் பொருள் எல்லாம் மூவகையாகி அடங்கும் என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): பாடலுள் பயின்றவை நாடும் காலை - சான்றோர் செய்யுளகத்துப் பயின்ற பொருளை ஆராயுங்கால். முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே - முதற்பொருள் எனவும் கருப்பொருள் எனவும் உரிப்பொருள் எனவும் சொல்லப்பட்ட மூன்று பொருண்மையும் (காணப்படும்). நுவலுங்காலை முறை சிறந்தன -அவை சொல்லுங்காலத்து முறைமையாற் சிறந்தன1.

இச் சூத்திரத்துள் பாடலுட் பயின்ற பொருள் மூன்று என ஓதி, அவற்றுள் உரிப்பொருள் என ஒன்றை ஓதினமையால், புறப் பொருளும் உரிப்பொருளாகியவாறு கண்டு கொள்க.

முறைமையாற் சிறத்தலாவது: யாதானும் ஒரு செய்யுட்கண் முதற் பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் வரின், முதற்பொருளால் திணையாகும் என்பதூஉம், முதற்பொருள் ஒழிய ஏனைய, இரண்டும் வரின் கருப்பொருளால் திணையாகும் என்பதூஉம், உரிப்பொருள் தானே வரின் அதனால் திணையாகும் என்பதூஉம் ஆம். அவை ஆமாறு முன்னர்க் காணப்படும். அஃதேல், ஒரு பொருட்கு ஒரு காரணம் கூறாது மூன்று காரணம் கூறியது என்னை எனின், உயர்ந்தோர் என்றவழிக் குலத்தினால் உயர்ந்தாரையும் காட்டும், கல்வியான் உயர்ந்தாரையும் காட்டும்; செல்வத்தான் உயர்ந்தாரையும் காட்டும்; அதுபோலக் கொள்க. [முதல் ஏகாரம் பிரிநிலையாகவும், இரண்டாம் ஏகாரம் அசைநிலையாகவும் வந்தன]. (அகத். 3).

குறிப்பு விளக்கம்


1. முதலிற் கருவும் கருவில் உரிப்பொருளுஞ் சிறந்துவரும். இம் மூன்றும் பாடலுட் பயின்று வரும் எனவே வழக்கினுள் வேறு வேறு வருவதன்றி ஒருங்கு நிகழா என்பதூஉம் , நாடுங்காலை யெனவே புலனெறி வழக்கிற் பயின்றவாற்றான் இம் மூன்றனையும் வரையறுத்துக் கூறுவதன்றி வழக்குநோக்கி இலக்கணம் கூறப்படாதென்பதூஉம் பெறுதும்; "நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்" (தொல் - பாயிரம்) என்று புகுந்தமையிற் பொருளும் அவ்விரண்டினாலும் ஆராய்தல் வேண்டுதலின். (நச்சி.) "முதற்கரு உரிப்பொருள் கொண்டே வருவது திணை."

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...