திங்கள், 12 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: பொருட் பிரிவு

தொல்காப்பிய அகத்திணை இயல்: பொருட் பிரிவு

30. மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே. (அகத். 30)

இது, மேற்சொல்லப்பட்ட மூவகை நிமித்தமுமன்றி வருவன உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய - நால்வகை நிலத்தினும் மேவிய சிறப்பையுடைய மக்களையல்லாத தேவரது பூசையும் விழவும் முதலாயினவும் முல்லை முதலாக சொல்லிய முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய நிலத்தின் மக்களும், முறையால் பிழைத்தது பிழையாது ஆகல்வேண்டியும் - முறைமையில் தப்பியவழி தப்பாது அறம் நிறுத்தல் காரணமாகவும், இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவு - செய்யப்பட்ட ஒள்ளிய பொருள் ஆக்குதல் காரணமாகவும் பிரிவு உளதாம் .

மேவியசிறப்பின் ஏனோர் படிமைய என்பது நால்வகை நிலத்தினும் மேவிய சிறப்பையுடைய மக்களையல்லாத தேவரது படிமையவாகிய பொருள்கள் என்றவாறு. முல்லை முதலாச் சொல்லிய என்பது முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய நிலத்தின் மக்கள் என்றவாறு. முறையால் பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் பிரிவே என்பது மேற்சொல்லப்பட்டன முறைமையில் தப்பியவழித் தப்பாது அறம் நிறுத்தற்பொருட்டும் பிரிவுளதாம் என்றவாறு. இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே என்பது செய்யப்பட்ட பொருள் முடிய வேண்டியும் பிரிவு உளதாம் என்றவாறு.

[இதன் பொழிப்பு, தேவரது பூசை முதலாயினவும் மக்களும் முறைமை தப்பியவழி தப்பாது அறம்நிறுத்தல் காரணமாகவும், பொருளாக்குதல் காரணமாகவும் பிரிவு உளதாம் என்றவாறு.]

காவல், பொருட்பிரிவு எனப் பிறநூலகத்து ஒதப்பட்ட இருவகைப் பிரிவும் ஈண்டு ஓதப்பட்ட தென்றுகொள்க. ' மேவிய ' என்பது " மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும் " (அகத்-5) என்பதனால், நால்வகை நிலத்தினும் மேவிய எனப் பொருளாயிற்று. 'சிறப்பினேனோர்' என்றதனால் சிறப்புடையார் மக்களும் தேவரு மாகலின். மக்களல்லாதாரே தேவர் என்று பொருளாயிற்று. ' படிமை' என்பது ப்ரதிமா என்னும் வடமொழித்திரிபு. அது தேவர்க்கு ஒப்புமையாக நிலத்தின்கண் செய்து அமைத்த தேவர்மேல் வந்தது. அவருடைய பொருளாவன பூசையும் விழாவும் முதலாயின.

'முல்லை முதலாச் சொல்லிய ' என்பது " பிறந்தவழிக் கூறல் " (சொல்-114)என்னும் ஆகுபெயரான் அந் நிலத்தின் மக்களை நோக்கிற்று. 'பிரிவு' என்பதனை,பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் பிரிவுளதாம், இழைத்த வொண்பொருள் முடியவும் பிரிவுளதாம் என இரண்டிடத்துங் கூட்டுக; ஆம் என்பது எஞ்சி நின்றது.

தேவர் காரணமாகப் பிரியும் பிரிவுக்குச் செய்யுள்:

"அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
ஈர்ங்கா ழன்ன அரும்புமுதி ரீங்கை
ஆலி யன்ன வால்வீ தாஅய்
வைவா லோதி மையண லேய்ப்பத்
தாதுறு குவளைப் போதுபிணி யவிழப்
படாஅப் பைங்கட் பாவடிக் கயவாய்க்
கடாஅ மாறிய யானை போலப்
பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ
மைதோய் விசும்பின் மாதிரத் துழிதரப்
பனியடூஉ நின்ற பானாட் கங்குல்
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரணில் காலைக்
கைதொழு மரபிற் கடவுள் சான்ற
செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத்திறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
சூடா வாகைப் பறந்தலை யாடுபெற
ஒன்பது குடையும் நன்பக லொழித்த
பீடின் மன்னர் போல
ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே." (அகநா. 125)


சேரன் செங்குட்டுவனார் கண்ணகியைக் கடவுள் மங்கலம் செய்தற்குப் பிரிந்த பிரிவு சிலப்பதிகாரத்திற்கண்டு கொள்க. இத்துணையும் பிரிவு அறு வகைப்படும். என்றவாறாயிற்று. அஃதேல் பரத்தையிற் பிரிவு என்பதோ எனின், அதுநிலம் பெயர்ந்து உறையாமையானும், இவை போல் சிறக்காமையானும். அறமுறைமை செய்யப் பிரிதலும் பொருள் காரணமாகப் பிரிதலுமின்றிப் பிரிதலினானும், கற்பியலுள் கூறப்படும் என்க. ஈண்டும் சிறுபான்மை கூறுப. (அகத். 30).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...