சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: இவையும் உரிப்பொருளோடு ஒக்கும்

தொல்காப்பிய அகத்திணை இயல்: இவையும் உரிப்பொருளோடு ஒக்கும்

17. கொண்டுதலைக் 1கழிதலும் பிரிந்தவண் 2இரங்கலும்
உண்டென மொழிப ஓரிடத் தான.(அகத். 17)

இதுவும், ஒருசார் உறுப்புப் பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): கொண்டு தலைக்கழிதலும் (உண்டு) பிரிந்து அவண் இரங்கலும் உண்டு - கொண்டுதலைக் கழிதலும் உண்டு,3 பிரிந்து அவண் இரங்கலும் உண்டு. ஓர் இடத்தான் என மொழிப - ஓரோ இடத்துக்கண் என்று கூறுப.

உண்டு என்பதை இரண்டிடத்தும் கூட்டுக. அன்றியும் உண்டென்பதனை இல்லென்பதன் மாறாக்கி விரிவுத்திணை யாக்கிப் பொதுப்பட நின்றது எனவுமாம். ஓரிடத்து என்றமையான், மேற் சொல்லப்பட்ட ஐவகை உரிப்பொருளும் போல் எல்லாத் திணைக்கும் பொதுவாகி வருதலின்றி, கொண்டு தலைக்கழிதல் பாலைக்கண்ணும், பிரிந்தவன் இரங்கல் பெருந்திணைக் கண்ணும் வரும் என்று கொள்க. கொண்டு தலைக் கழிதலாவது உடன்கொண்டு பெயர்தல். அது, நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமையானும், உடன்கொண்டு பெயர்தலின் பிரிதலின் அடங்காமையானும், வேறு ஓதப்பட்டது. பிரிந்தவண் இரங்கலாவது ஒருவரை ஒருவர் பிரிந்த இடத்து இரங்கல். அது நெட்டாறு சென்ற வழி இரங்குதல் இன்மையானும் ஒருவழித் தணந்த வழி ஆற்றுதலின்றி வேட்கை மிகுதியால் இரங்குதலானும் வேறு ஓதப்பட்டது. (இதற்கு) ஏறிய மடற்றிறமும் தேறுதல் ஒழிந்த காமத்துமிகுதிறமும் முதலாயின பொருள். இது பெருந்திணைக்கு உரித்து. [இடத்தான் என்பது வேற்றுமை மயக்கம், ஈற்றகரம் சாரியை.]. (அகத். 17).

குறிப்பு விளக்கம்

(நூற்பாப் பாடவேறுபாடு): 1. கழியினும்.

2. இரங்கினும்.


3. இல்லிருந்து செந்தீயோம்பல் வேளாளர்க்கு இன்மையிற்கொண்டு தலைக்கழிதல் அவர்க்கு உரியதாயிற்று. ஒழிந்த மூன்று வருணத்தோரும் தமக்கு உரிய பிரிவின்கண் செந்தீ ஓம்புவாரை நாட்டிப் பிரிப, ஆகலான் அவர்க்கு ஏனைய பிரிவுகள் அமைந்தன.(நச்சி.)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...