ஞாயிறு, 25 அக்டோபர், 2015

குறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 5)

                                குறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 5)

ஆராய்ந்த முறை
            சீவக சிந்தாமணியை நான் முதன்முறை பதிப்பிக்கும் பொருட்டு ஆராய்ந்து வருகையில் அந்நூல் உரையில் மேற்கோளாக வந்துள்ள செய்யுட்களும் செய்யுட் பகுதிகளும் இன்ன இன்ன நூல்களைச் சார்ந்தவை என்று முதலில் எனக்கு விளங்கவில்லை. பத்துப் பாட்டு இன்னவை, எட்டுத் தொகை இன்னவை என்று விளக்கமாக அறிந்து கொள்ள முடியாத காலம் அது. சீவக சிந்தாமணியில் உள்ள மேற்கோள்களுக்குரிய ஆகரங்கள் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடித்து அப்பதிப்பில் அமைத்தேன். அக்காலத்தில் நான் படித்து அறிந்த நூல்களுள் இக்குறுந்தொகையும் ஒன்று.
            திருவாவடுதுறைப் புத்தகசாலையில் இருந்து எட்டுத் தொகையில் கலித்தொகை, பரிபாடல் என்னும் இரண்டொழிய ஏனைய ஆறு நூல்களும் எழுதப் பெற்ற ஏடொன்று கிடைத்தது. அக்காலத்தில் அவற்றின் உட்பொருளை அறிந்து இன்புறுவார் அரியராக இருந்தனர். இடையே பல காலமாகச் சங்க நூல்களைப் படித்தலும் பாடம் சொல்லுதலும் அருகிப் போயினமையின் அந்நூல்களைப் பற்றிய உண்மையே தெரி்யாமல் இருந்தது. ஆதலின் அவ்வேட்டுச் சுவடியில் எழுதுவோர் பொருளறியாக் குறையால் நேர்ந்த பிழைகள் இருந்தன. அதனைப் பிரதி செய்விக்கையில் பிரதி செய்வோர்களால் நேர்ந்த பிழையால் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் செய்யப் பெற்றன. அப்பால் நான் ஏட்டுச் சுவடிகள் தேடிய இடங்களில் அடியில் காட்டியபடி வேறு ஒன்பது பிரதிகள் கிடைத்தன. அவற்றில் சில பூர்த்தியாக இருந்தன. சில குறையாக இருந்தன.
    1. திருநெல்வேலி ஸ்ரீ அம்பலவாண கவிராயரவர்கள் ஏட்டுப் பிரதி.
    2. மந்தித் தோப்பு மடத்தில் கிடைத்த ஏட்டுப் பிரதி.
    3. செங்கோல் மடத்தில் கண்ட குறையான ஏட்டுப் பிரதி.
    4. திருமயிலை வித்வான் ஸ்ரீ சண்முகம் பிள்ளையவர்கள் கடிதப் பிரதி.
    5. சோடசாவதானம் ஸ்ரீ சுப்பராய செட்டியாரவர்கள் ஏட்டுப் பிரதி.
    6. தொழுவூர் ஸ்ரீ வேலாயுத முதலியாரவர்கள் ஏட்டுப் பிரதி.
    7. சென்னை இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலை ஏட்டுப் பிரதி.
    8. புதுக்கோட்டை ஸ்ரீ ராதாகிருஷ்ணையரவர்கள் கடிதப் பிரதி.
    9. திருக்கோணமலை ஸ்ரீ தி..கனக சுந்தரம் பிள்ளையவர்கள் கடிதப் பிரதி.
இவற்றில் சிலவற்றைப் பார்த்துக் கொண்டு உரியவர்களிடம் கொடுத்து விட்டேன். இவற்றை அன்றிப் பிரயாணங்களில் கண்ட சில பிரதிகளோடு ஒப்பு நோக்கிப் பிரதிபேதங்கள் குறித்துக் கொண்டதும் உண்டு. மேலே குறித்த பிரதிகளுள் 4,9 என்னும் எண்ணுள்ள கடிதப் பிரதிகள் இரண்டையும் மீண்டும் ஒருமுறை பார்க்க விரும்பிய காலத்தில், அவற்றை வருவித்து வைத்திருந்த சென்னைச் சர்வகலா சாலைத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத் தலைவர் ஸ்ரீமான் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள், பி.., பி.எல்., அன்போடு உதவினார்கள். இப்பிரதிகள் யாவும் பெரும்பாலும் ஒரே மூலச் சுவடியின் பிரதிகளாகவே தோற்றின. எழுதுவோரால் நேர்ந்த பிழைகளும் மாற்றங்களும் ஒவ்வொன்றிலும் காணப்படுகின்றன. குறுந்தொகையின் பழைய உரை எங்கேனும் கிடைக்குமோ என்று அலைந்து தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அதன்மேல், கிடைத்தலரிதென்ற கருத்து உண்டாயினமையின் அம் முயற்சியை விட்டு விட்டேன்.
குறுந்தொகைப் பிரதிகளை ஒப்பு நோக்கிய பிறகு தொல்காப்பிய உரை முதலியவற்றைப் படித்து அங்கங்கே மேற்கோளாக ஆளப்பட்ட இந்நூற் செய்யுட்களையும் செய்யுட் பகுதிகளையும் தொகுத்து அவற்றில் கண்ட பாட பேதங்களையும் குறித்துக் கொண்டேன். இம் முயற்சியால் பல அருமையான திருத்தங்கள் கிடைத்தன; பல ஐயங்கள் நீங்கின.
அப்பால் குறுந்தொகையின் மூலத்தில் காணப்படும் அரும்பதங்கள், சொற்றொடர்கள், உவமைகள், செய்திகள் முதலியவற்றிற்கு ஓரகராதியும் புலவர் பெயர்களுக்கு ஓரகராதியும் எழுதி வைத்துக் கொண்டேன். ஒரே புலவர் பாடிய செய்யுட்களைத் தொகை நூல்களில் படித்தறிந்த காலத்தில் அவற்றினுட் காணப்படும் ஒப்புமையாலும் சொல்லாட்சியாலும் இந்நூல் பகுதிகள் சில விளங்கின.
            இங்ஙனம் பல வகையான குறிப்புக்களும் அகராதிகளும் எழுதி வைத்துக் கொண்டு பொருள் வரையறை செய்யத் தொடங்கினேன். நாளடைவில் பெரும்பாலான செய்யுட்களின் பொருள்கள் விளங்கின; ‘இனி இதனை அச்சிட்டு வெளிப்படுத்தலாம்என எண்ணியிருந்தேன். இடையே, வாணியம்பாடி ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக இருந்த தி.சௌ. அரங்கசாமி ஐயங்கார் என்பவர் குறுந்தொகைக்கு உரை எழுதி 1915-ஆம் வருடம் பதிப்பித்து வெளியிட்டனர். அப்பால் குறுந்தொகை ஆராய்ச்சியில் எனக்கிருந்த ஊக்கம் சிறிது தளர்ந்தது. பிற நூல் ஆராய்ச்சியில் கருத்தைச் செலுத்தலானேன். பின்பும் சிலர் சில பத்திரிகைகளில் இந்நூலை வெளியிடுவதாகக் கேள்வியுற்றேன். 1933-ஆம் வருஷம் புரசவாக்கம் ஸர் எம்.ஸி. டி. ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக உள்ள ஸ்ரீமான் வித்வான் சோ. அருணாசல தேசிகரவர்கள் குறுந்தொகை மூலத்தை மட்டும் பதிப்பித்து வெளியிட்டார்கள். பழைய உரை இல்லாமையால் புதிய உரை எழுதி இந்நூலை நான் வெளியிட வேண்டுமென்ற கருத்து, சில தமிழ் அன்பர்களுக்கு இருந்ததை உணர்ந்தேன். பல அன்பர்கள் அடிக்கடி தூண்டி வந்தார்கள். முற்கூறிய ஐயங்கார் அவர்கள் உரைப்பிரதி இப்பொழுது எங்கும் கிடைக்கவில்லை. பல வருஷங்களாக உழைத்துத் தொகுத்த குறிப்புக்கள் வீணாகாமல் இருக்கும் பொருட்டு இந்நூலை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மீண்டும் உண்டாயிற்று. அதனால் இந்நூல் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வரலானேன். குறிப்புக்களும் ஒப்புமைப் பகுதிகளும் உரைப் பகுதிகளும் எழுதித் தொகுக்கப்பட்டன. அவ்வப்போது என்னோடு இருந்து பழகுபவர்கள் பலர் இந்த ஆராய்ச்சிக்கு உதவியாக இருந்தனர்.
            பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரை எழுதிய இந்நூலுக்கு உரை எழுதும் தகுதி என்பாற் சிறிதுமில்லை என்பதையும் என் முதுமையாலும் பலவேறு வகையான முட்டுப்பாடுகளாலும் எனக்கு உண்டாகி உள்ள தளர்ச்சியையும் நன்கு உணர்ந்திருப்பினும் இளமை தொடங்கி இவ்வுலகில்யாதினும் சிறந்ததாக எண்ணி வாழ்ந்து வருதற்குக் காரணமாகிய தமிழிடத்துள்ள அன்பும், எங்ஙனமேனும் இறைவன் இம் முயற்சியை நிறைவேற்றி அருளுவான் என்ற துணிவும் இப்பதிப்பில் என்னை ஈடுபடச் செய்தன.
  சர்வகலாசாலையார் உதவி

என் கருத்தை அன்பர்கள் சிலரால் அறிந்த ஸ்ரீமான் டி. சிவராம சேதுப்பிள்ளையவர்கள் 1934-ஆம் வருஷம், தாம் தலைவராக இருந்த தமிழ்ப்பாட புத்தகசபையின் மூலம் இப்பதிப்புக்குரிய உதவி சென்னைச் சர்வகலாசாலையாராற் கிடைக்கும்படி செய்வித்தார்கள். அவர்களுடைய நன்முயற்சியையும் தமிழ்ப் பாஷாபிமானத்தையும் மிகவும் பாராட்டுகின்றேன். சர்வகலாசாலையார் ஆயிரத்தைந்நூறு ரூபாய் பொருளுதவி செய்வதாகத் தீர்மானித்து ஐந்நூறு ரூபாய் முதலில் கொடுத்து உதவினார்கள். அவர்களுடைய ஆதரவின்றேல் இப்பதிப்பு இப்பொழுது வெளிவந்திராது. இவ்வளவு வருஷங்களாக நான் வெளியிட்டு வரும் நூல் பதிப்புகளுக்கு இதைப் போன்ற பேருதவி கிடைத்ததில்லை என்பதைத் தமிழ் நாட்டினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...