திங்கள், 26 அக்டோபர், 2015

குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 1)

குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 1)
முன்னுரை
         சங்கமருவிய நூல்களின் சொற்பொருட் போக்கிற்கும் பிற்கால நூல்களின் போக்கிற்கும் பல வகையில் வேற்றுமை உண்டு. பழைய காலத்தில் நல்லிசைப் புலவர்கள் அமைத்த புலனெறி வழக்கத்தில் பலவகை மரபுகள் பிற்காலத்தில் வழக்கொழிந்தன. பிற்காலத்தாருடைய நூல்களில் பல புதிய அமைப்புக்கள் காணப்படுகின்றன. நாளடைவில் உலகத்தில் மக்களின் நடை, உடை, பாவனைகள் வேறுபடுதல் போலவே நூல்களின் நடை முதலியனவும் வேறுபடுதல் இயல்பே ஆகும்.
    சங்கச் செய்யுட்களிலே சில வரையறைகள் உண்டு. இன்ன பொருளை இன்னவாறு அமைக்க வேண்டும் என்ற மரபு பிறழாமல் புலவர்கள் செய்யுட்களை இயற்றினர். அங்ஙனம் அச்செய்யுட்கள் வரையறைக்குள் அடங்கினும் அவர்களிடைய மனோபாவமும் அதனை வெளியிடும் முறையும் சொற்பொருள் செறிவும் தனிச் சிறப்போடு விரிந்து விளங்குகின்றன. இயற்கையோடு பழகி இயற்கை அழகில் ஈடுபட்டு அவ்வியற்கையின் பலவகைக் கோலங்களைச் சொற் சித்திரங்களால் உருப்படுத்திக் காட்டும் அவர்களுடைய பேரறிவின் திறம் யாவரும் வியத்தற்குரியது.
    புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்யுட்களில் புனைந்து காட்டும் ஆற்றலினும் அகத்தே தோன்றும் கருத்துக்களை உணர்ச்சியும் மெய்ப்பாடும் புலப்பட உரைக்கும் ஆற்றல் மிகவும் சிறந்தது. இவ்வகை ஆற்றலை உடைய கவிஞர்களே அறிஞர்களுடைய பெருமதிப்பை அடைகிறார்கள்.
    உலகிலுள்ள பொருள்களைக் காட்சிப்பொருள் (காட்சியென்பது தலைமை பற்றி ஐம்பொறி  உணர்வையும் குறித்து நின்றது. ) கருத்துப்பொருள் என இருபெரும் பிரிவாகப் பிரித்துக் கூறுவர். காட்சிப் பொருளாவன ஐம்பொறி உணர்விற்கு உட்பட்டவை. கருத்துப் பொருளாவன மன உணர்வால் அறியப்படுவன. தம் செய்யுட்களைப் படிப்பவர்களுடைய அகக்கண்ணின் முன் இவ்விருவகைப் பொருள்களையும் தோற்றச் செய்யும் ஆற்றல் சங்க காலத்துப் பெருங்கவிஞர்கள்பால் குறைவற நிரம்பி இருந்தது. இயற்கைப் பொருள்களின் இயல்புகளை அவர்கள் செய்யுளில் பரக்கக் காணலாம்; அன்பு, வீரம் முதலிய பண்புகளை வெளிப்படுத்தும் செய்யுட்கள் பல. கருத்துப் பொருளாகிய அன்பின் வழி நிகழும் பலவகை நிகழ்ச்சிகளைக் கூறும் அகப் பொருள், அவர்களுடைய கவி மலரும் சோலை. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் சங்க நூல்களுள் அகப்பொருள் பற்றியனவே அதிகமானவை.
      ஒத்த அன்பால் ஒரு தலைவனும் ஒரு தலைவியும் பால் வழி ( பால் - ஊழ்வினை) உய்க்கப்பட்டு அளவளாவிய காலத்துப் பிறந்த இன்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவகர்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதொரு பொருளாதலின் அதனை அகமென்றனர். இப்பொருள் பற்றிய புலனெறி வழக்கத்தின் இலக்கணத்தைத் தொல்காப்பியப் பொருளதிகாரமும், இறையனாரகப் பொருள் முதலிய நூல்களும் உணர்த்துகின்றன.
    இங்ஙனம் உணர்த்தப்படும் அகப்பொருள் ஐந்து திணையாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொன்றும் முதல், கரு, உரியென்னும் மூவகையாலும் செய்யுளில் விரிக்கப்படும். முதல் என்பன நிலமும் காலமும்; கருவென்பன தெய்வம் முதலியன; உரியென்பன திணைக்குரிய ஒழுக்கங்கள். இவ்வரையறைகள் புலவர்களால் இயற்றப்பெறும் கவி அமைப்புக்கு உரியனவே அன்றி உலகியலுக்கு உரியனவல்ல. ஆனால் இவற்றில் சில மட்டும் உலகியலுக்கு ஏற்புடையனவாகும்.
  நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் 
     பாடல் சான்ற புலனெறி வழக்கம்     (தொல். அகத்.56)
என்னும் சூத்திர உரையில் இளம்பூரணர்,
    ‘நாடக வழக்காவது சுவைபட வருவன வெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது செல்வத்தானும் குலத்தானும் ஒழுக்கத்தானும் அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போரும் அடுப்போருமின்றி வேட்கை மிகுதியால் புணர்ந் தாரெனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும், பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவன எல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறல். உலகியல் வழக்காவது உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது
என வரைவனவற்றால், கவியின் சுவை காரணமாக இத்தகைய வரையறைகள் கொள்ளப்பட்டன என்பதும், சில நிகழ்ச்சிகள் உலகியலோடு ஒத்து வரும் என்பதும் அறியப்படும். பெரும்பான்மையும் நாடக வழக்கே அமைதலின் அதனைத் தொல் காப்பியர் முன்னர்க் கூறினர் போலும். நாடக வழக்கு, கவிஞர்களுடைய உள்ளத்தால் கற்பனை செய்யப்பட்டுப் படிப்போருக்கு இனிமை பயப்பது. இறையனாரகப் பொருள் உரையாசிரியர் இவ்வொழுகலாற்றை,
இல்லது, இனியது, நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாதலின் இதனை உலக வழக்கினோடு இயையானென்பது (சூ.1, உரை)
எனக் கூறுவதும் காண்க.
    எனவே, கவிகள் தம்முடைய கற்பனை ஆற்றலால் பலவகைச் சுவை பொருந்தக் காட்சிப் பொருளையும் கருத்துப் பொருளையும் புனைந்து உரைத்துச் சிறுபான்மை உலகியலோடும் பொருந்த நல்ல பொருளை அமைத்துக் காட்டிய செய்யுட்களே இவ்வகப் பொருட் செய்யுட்களாம் என்பது தெரிய வரும். இவற்றிற் கூறியபடியே உலகியல் நிகழ வேண்டும் என்பது வரையறையன்று; இவை அனைத்தும் உலகியலுக்குப் புறம்பானவையென்று கொள்ளுதலும் தக்கதன்று.
    இச்செய்யுட்களில் காணப்படுவனவாகிய தலைவன் தலைவியரிடையே வளரும் அன்புநிலை, அவர் இல்லறம் நடத்தும் முறை முதலியன உலகியலைச் செம்மைப்படுத்தும் தன்மையின. இளம்பூரணர் எடுத்துக் காட்டியனவாகிய தலைவன் தலைவியருடைய ஒப்பு முதலியன செய்யுளுக்காக அமைத்துக் கொண்டவை. இங்ஙனமே சிறந்த தகுதி வாய்ந்தாரையே காப்பியத்துக்குத் தலைவராக அமைக்க வேண்டுமென்று பிற்காலத்தில் காப்பிய இலக்கணம் கூறுவது கவிஞனுடைய சிறந்த மனோபாவங்கள் வெளிப்பட்டு இன்சுவையை உண்டாக்குமென்னும் காரணம் பற்றியே ஆகும்.
    முதல், கரு, உரி என்னும் மூவகைப் பொருள் வரையறையும் கவிச்சுவையை மிகுதிப்படுத்தவே போந்ததென்று தோற்றுகின்றது. உலகத்தில் குறிஞ்சி நிலத்துள்ளாரே அளவளாவுவது, பாலை நிலத்துள்ளாரே பிரிவது, முல்லை நிலத்துப் பெண்டிரே தலைவரைப் பிரிந்து ஆற்றியிருப்பது, மருத நிலத்தினரே ஊடுவது, நெய்த நிலத்தினரே இரங்குவது என்ற வரையறை இல்லை; ஆனால் கவிஞன் அமைக்கும் உலகத்திலோ இவ்வரையறைகள் காணப்படுகின்றன. இது நாடக வழக்காகும். நாடகத்தில் அரங்கில் நிகழும் நிகழ்ச்சிக்கு ஏற்ற களனொன்றை நாடகப்புலவன் அமைத்துக் கொள்வதும், ஓவியப் புலவன் தான் எழுதப் புகும் ஓவியத்திற்கு ஏற்ற நிலைக்களனை எழுதிக் கொள்வதும் போன்றது இது. பிரிவைப் புனையும் ஆசிரியன் துன்ப உணர்ச்சியை மிகுதிப்படுத்த வேண்டி நீரில்லாத வறுஞ்சுரத்தையும், ஓய்ந்த யானையையும் தான் கூறும் நிகழ்ச்சியோடு இயைபு படுத்துகின்றான். இன்ப உணர்ச்சியை மிகுதிப்படுத்த வேண்டித் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் காணும் நிகழ்ச்சியை, ( இறை. 2, உரை) சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும் ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணங்கமழ்ந்து பாதிரியும் பரவை ஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து பொரிப்புன்கும் புன்னாகமும் முருங்கொடுமுகை சிறந்து வண்டறைந்து தேனார்ந்து வரிக்குயில்கள் இசைபாடத் தண்டென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவண் அமைத்துக் காட்டுகின்றான்.
    இவ்வாறே மற்ற நிலங்களுக்கும் அவ்வந் நிலத்தில் நிகழும் ஒழுக்கத்திற்கும் இயைபிருத்தலை அறியலாகும். நிலத்தைப் போலவே கால வரையறையும் கவிச் சுவையைப் பெருக்குதற்கு அமைந்தது. அவ்வத் திணையின் ஒழுக்கத்திற்கு இலக்கணத்தில் வரையறுக்கப்பட்ட காலங்கள் ஏற்புடையனவாதலை நச்சினார்க்கினியர் (தொல். அகத். 6,8,9, உரை.) தொல்காப்பியப் பொருளதிகார உரையில் விளக்கிச் சொல்கின்றார்.
    கருப்பொருள்கள் ஒவ்வொரு வகை நிலத்தின் இயல்பையும் அறிந்து அமைக்கப்பட்டன. அவை உலகியல்போடு ஒத்தன. நல்லிசைப் புலவர்கள் மரம், விலங்கு, பறவை முதலியவற்றின் இயல்புகளை நன்றாக உணர்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
    உரிப்பொருளாவது புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் ஆகிய இவ்வைந்தும் இவற்றின் நிமித்தங்களும் ஆகும். இப்பொருளே முதல் கருவென்னும் இரண்டைக்காட்டிலும் சிறந்தது. பிற பொருள்கள் தம்முள் மயங்கினும் உரிப்பொருள் மயங்குதல் தகாதென்பது இலக்கணம்.
    முதல், கரு என்னும் இரண்டும் உரிப்பொருளாகிய நாடக நிகழ்ச்சிக்கு நிலைக்களனாக உதவுகின்றன. அவ்விரண்டும் பெரும்பாலும் காட்சிப் பொருள் வகையைச் சார்ந்தன. அவற்றை நல்லிசைப் புலவர்கள் அமைத்துச் செய்யுள் புனைகையில் நாம் அக் காட்சிகளில் ஒன்றி விடுகின்றோம். உரிப் பொருளை அமைக்கும்போது கவியினுடைய இணையற்ற பாவிகத்தை அறிந்து மகிழ்கின்றோம்.

    சங்க காலத்துப் புலவர் பெருமக்களின் கவியாற்றலை அறிந்து கொள்வதற்கு இக் குறுந்தொகையும் ஒரு கருவியாகும். இதன்கண் அகநானூற்றைப் போல முதல் கருப் பொருள்களைப் பற்றிய செய்திகள் விரிவாகக் காணப்படவில்லை; திருக்குறளைப் போல அறவே நீக்கப்படவுமில்லை. இலக்கண அமைதி நன்குடையதாகி விரிவும் சுருக்கமும் இன்றி இயற்கைக் காட்சிகளின் எழில் நலங்களையும், அகனைந்திணை ஒழுக்கங்களையும், பண்டைக் கால நாகரிகச் சிறப்பையும், வேறுபல அரிய பொருள்களையும் விளக்கிக் கொண்டு நிற்பது இக் குறுந்தொகை.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: