திங்கள், 26 அக்டோபர், 2015

குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 2)

குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 2)
ஐவகை நிலச் செய்திகள்
குறிஞ்சி
         இந்நூல்களில் ஐந்து நிலங்களின் இயல்புகளும் நிகழ்ச்சிகளும் அங்கங்கே நல்லிசைச் சான்றோரால் புலப்படுத்தப்படுகின்றன. குறிஞ்சிச் செய்திகளைப் பாடுதலில் கபிலர் மிக்க திறமை வாய்ந்தவர். வேறு புலவர் பலரும் அத்திணையின் வளத்தை மிக அழகாக அமைத்துக் காட்டுகின்றனர்.
    குறுந்தொகையில் உள்ள குறிஞ்சி நிலங்களில் அந்நிலத்திற்குப் பெயரை அளித்த குறிஞ்சி மலரைக் காண்கின்றோம்கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு (குறுந். 3. ) வண்டுகள் பெரிய தேனை இழைக்கின்றன.
    அந்நிலத்து வாழ்வோர்களைக் கானவன், குறவன், புனவன் என்று வழங்குவர்; மகளிரைக் கொடிச்சியர் என்பர். தலைமகன் நாடன், வெற்பனென்னும் திணைநிலைப் பெயர்களால் வழங்கப்படுகின்றான்.
     குறவர்கள் மரங்களை வெட்டி அவற்றைச் சுட்ட பின்னர் அந்நிலத்தில், தினை, ஐவனம் முதலியவற்றை விதைத்து அருவி நீரால் விளைப்பார்கள். தினையோடு பருத்தி அவரை என்பவற்றையும் இடையிட்டு விளைப்பதும் உண்டு. தம்முடைய உணவுக்காகத் தினை முதலியவற்றையும், அவ்வுணவுக்குச் சுவை தரும் பருப்புக்காக மொச்சையையும், உடைக்காகப் பருத்தியையும் விளைத்து உண்ண உடுக்கக் குறைவின்றி வாழும் அவருடைய வாழ்வில் உள்ள நிறைவு விளங்குகின்றது.
    தாம் விளைக்கும் பயிரையும் மரத்தையும் ஆடவர் காப்பர். குறவன் தினைப் புனத்திற் பரணிட்டு அதன்கண் இருந்து காத்தலின் அவனைச்  சேணோனென்று (சேண்நெடுந்தூரம்) வழங்குவர். அவன் தினையை உண்ண வரும் யானையைக் கவண் கல்லால் எறிந்து ஓட்டுவான். இராக் காலங்களில் கொள்ளிக் கட்டையை அருகில் வைத்துக் கொண்டிருப்பான். அது கண்டு விலங்கினங்கள் ஓடும். பலாப் பழத்தைக் குரங்குகள் கவராமல் மரந்தோறும் வலைகளை மாட்டிக் காத்தல் கானவர் வழக்கம்.
    மகளிர் தினைப்புனத்தைக் காத்துக் கிளியையும் குருவிகளையும் ஓட்டுவர்; அருவியில் விளையாடுவர்; சுனைப் பூவையும் வேறு மலரையும் கொய்து புனைந்து மகிழ்வர். அந்நிலத்து வேட்டுவர் மான் முதலியவற்றை வேட்டை ஆடுவர். கற்களை வீசியும் சீழ்க்கை அடித்தும் புதர்களில் மறைந்துள்ள விலங்கினங்களை எழுப்பி அலைப்பர். அவர்களிடம் இரக்கம் என்பது சிறிதும் காணப் பெறாது. பெண் மான் பார்த்திருப்பக் கலைமானின் உயிர்நிலையில் வாளியை எய்துப்பிடுங்குவர் என்று அவர்களது வன்கண்மை ஒரு புலவரால் கூறப்படுகின்றது.
     குறிஞ்சி நிலத்தாருக்கு ஐவனம் தினை என்பனவும், கவலைக் கிழங்கு, தேன், கள் முதலியனவும் உணவிற்குரிய பொருள்கள். கவலைக் கிழங்கைக் கானவர் அகழ்வர். அங்ஙனம் அகழ்ந்த குழியில் ஒரு கானவன் மணியைப் பெற்ற செய்தி ஒரு செய்யுளில் சொல்லப்படும்
    மலைச் சாரல்களில் தேன் மிகுதியாகக் காணப்படும். உயர்ந்த இடங்களில் உள்ள தேனை ஒற்றை மூங்கிலையே ஏணியாகக் கொண்டு ஏறி எடுப்பர். அவ்வேணியைக் கண்ணேணி (கண் - கணு; கணுவைக் கழிக்காமல் அதனையே படியாகக் கொண்டு
ஏறுதலின் கண்ணேணி என்று பெயர் பெற்றது) என்பர். தேனடைக்குக் கேடகத்தை ஒரு புலவர் உவமை கூறுகின்றார். மலைத்தேனைப் பெருந்தேன் என்று வழங்குவர். யானைக் கொம்பை விற்று அதன் விலையால் உணவுப் பொருள் பெற்று உண்பது மலைவாணர் வழக்கம்.
    குறவர் முருகனையும் மலையர மகளிரையும் வழிபடுவர். முருகனுக்கு வெறியாட்டெடுப்பர். மறியறுத்துத் தினையரிசியை வைத்து அரளி மாலையைச் சூட்டி வணங்குவர். தம்முடைய புனத்தில் விளைந்த முதற் கதிரைக் கடவுளுக்கு இட்ட பின்னரே உண்பர். அங்ஙனம் நிவேதித்தலின்,  ‘‘கடியுண் கடவுள்” (கடியுண் கடவுள் - புதியதை உண்ணும் கடவுள் ) என்று அத்தெய்வத்தை ஒரு புலவர் கூறுகின்றார். இதனால் அவர்களுடைய கடவுள் உணர்ச்சி வெளியாகின்றது. கடம்ப மரத்தை வைத்து அதன் அடியில் மேடை அமைத்து அக்கடம்பையே கடவுளாகக் கொண்டு போற்றுவதும் உண்டு. அவ்விடத்துக்கு மன்றம் என்று பெயர். அத்தெய்வத்தின்மேல் ஆணையிட்டுச் சூளுறுவர். கொடியவரைக் கடவுள் ஒறுக்குமென்று அஞ்சி ஒழுகுவர். மலைவாணர் தம் சிறார்களுக்குப் புலிப் பல்லைக் கோத்த தாலியை அணிவிப்பர். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி என்றும், பாக்கம் என்றும் வழங்கப்படுகின்றன. கள்ளுண்டு களியாட்டயர்ந்து யாவரும் மகிழ்ந்திருத்தலின், “நறவுமலிபாக்கம்என்று ஓரூரை ஒரு புலவர் சிறப்பிக்கின்றார்.
    குறிஞ்சி நிலத்துக்கு வளப்பத்தைத் தருவது அருவி. யாமத்தில் பெய்யும் மழையினால் காலையில் அருவியில் பெருவெள்ளம் பெருகிக் குறிஞ்சி நிலத்தாருக்கு இன்பத்தை உண்டாக்கும். மலையில் இருந்து மிக விரைவாக வீழ்வதாதலின் அதன் வேகத்திற்குத் தேரின் வேகத்தை உவமை கூறுவர். அருவியினால்,மலைச் சாரலில் இயல்பாக முளைத்த காந்தள், வேங்கை மரம் முதலியன வளரும்; மலைவாணர் அருவிக்கு அருகில் உள்ள நிலப்பரப்பில் ஐவனத்தை விதைத்து அதன் நீரால் விளைவித்துக் கொள்வர். மலையின் மேலுள்ள பலாப்பழம், வாழை, காந்தள், கொறுக்காந்தட்டை, மலர்கள் முதலியவற்றை அருவி கீழே அடித்துக் கொண்டு வரும் செய்திகள் இந்நூலில் காணப்படுகின்றன. அருவியின் ஓசை கேட்பதற்கு இனியது. அதற்கு முழவின் ஒலியையும் முரசின் முழக்கையும் உவமை கூறுவர். தூய வெள்ளிதாக இருத்தலின் அருவிக்குப் பாம்பின் உரியும், வளைந்து வருதலின் பாம்பும் உவமையாகக் கூறப்படுகின்றன. மகளிர் அருவி நீரில் ஆடி மகிழ்தல் வழக்கம். புணையைக் கைக்கொண்டும் நீராடுவர். தலைவி அருவியை முன்னிலைப்படுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் ஒன்று உள்ளது.

    மலைகளிலும் மலையைச் சார்ந்த இடங்களிலும் அங்கங்கே குண்டுக் கற்கள் இருக்கும். அவற்றைத் துறுகல் என்பர். அதற்கு யானையை உவமை கூறுவர். அதற்கு அருகில் மாணைக் கொடி படர்வதாகவும் களிறு துயில்வதாகவும் அக்கல்லின் மேல் வேங்கை மலர்கள் உதிர்வதாகவும் புலவர் பாடியுள்ளனர். மன்றத்தின் கண் உள்ள துறுகல்லில் காந்தள் மலர் மலர்ந்து அவிழ்கின்ற காட்சி ஒரு செய்யுளில் சொல்லப்படுகின்றது. மழை பெய்யாமல் பல நாட்களாகப் புழுதி முதலியன படிந்த துறுகல்லுக்குப் புழுதி படிந்து கழுவப்படாத யானையையும், மழையால் கழுவப்பட்ட துறுகல்லுக்கு நீராட்டிய யானையையும் உவமிப்பர்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: