சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: இதுவும் உரிப்பொருளே.

தொல்காப்பிய அகத்திணை இயல்: இதுவும் உரிப்பொருளே.

18.கலந்த பொழுதும் 1காட்சியும் அன்ன.(அகத். 18)

இதுவும் அது. [இதுவும், ஒருசார் உறுப்புப் பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.]
  
(இதன் பொருள்): கலந்த பொழுதும் - தலைவனைக் கண்ணுற்ற வழி மனநிகழ்ச்சி உளதாங் காலமும், (அதன்) பின்னர்க் குறிப்பறியுந் துணையும் நிகழும் நிகழ்ச்சியும், காட்சியும் - தலைவியை எதிர்ப்படுதலும் அன்ன - ஓரிடத்து நிகழும் உரிப்பொருள்.

கலந்த பொழுது என்பது, தலைமகளைக் கண்ணுற்றவழி மனநிகழ்ச்சி யுளதாங் காலம்; அக் காட்சிப் பின்னர்க் குறிப்பறியுந் துணையும் நிகழும் நிகழ்ச்சி. காட்சியாவது தலைவியை எதிர்ப்படுதல். குறிப்பறிந்த பின்னர்ப் புணருந்துணையும் நிகழும் முன்னிலையாக்கல் முதலாயின புணர்தல் நிமித்தம். இவை அந்நிகரனவன்றிப் பொதுப்பட நிற்றலின் வேறு ஓதப்பட்டன. அன்ன என்பது (இவையும்) ஓர் இடத்து நிகழும் உரிப்பொருள் என்றவாறு, ஓரிடமாவது கைக்கிளை.

அஃதேல், இவையும் புணர்தல் நிமித்தம் ஆயினால் வரும் குற்றம் என்னை எனின், ஒருவன் ஒருத்தியை எதிர்ப்பட்டுழிப் புணர்ச்சி வேட்கை தோற்றலும் தோற்றாமையும் உண்மையின், காட்சி பொதுப்பட நின்றது. ஐயம் முதலாகக் குறிப்பறிதல் ஈறாக நிகழும் மன நிகழ்ச்சி தலைமகள்மாட்டுக் காமக் குறிப்பு இல்வழிக் காமக்குறிப்பு உணராது கூறுதலின் புணர்தல் நிமித்தம் அன்றாயிற்று. (அகத். 18).

குறிப்பு விளக்கம்


1. முன்னர்க் கூதிரும் யாமமும் முன்பனியும் சிறந்ததென்றது இயற்கைப் புணர்ச்சிப் பின்னர் களவொழுக்கம் நிகழ்தற்குக் காலம் என்றுணர்க. (நச்சி.)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...