சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: திணை மயக்கம்: உரிப்பொருள் அல்லன மயங்கும்

தொல்காப்பிய அகத்திணை இயல்: திணை மயக்கம்: உரிப்பொருள் அல்லன மயங்கும்

15.உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. (அகத்.15)

இஃது எய்தாதது, எய்துவித்தல் நுதலிற்று.

(இதன் பொருள்): உரிப்பொருள் அல்லன - உரிப்பொருள் அல்லாத கருப்பொருளும், முதற்பொருளும்; மயங்கவும் பெறும்- 1மற்றொரு திணையொடு சேர நிற்கவும் பெறும்.

உம்மை எதிர்மறை யாகலான் மயங்காமை பெரும்பான்மை. எனவே,

"உய்த்துக் கொண்டுணர்தல்" (மரபு. 110)

என்னும் தந்திர உத்தியான் எடுத்தோதிய காலமாகிய முதற்பொருளும், பூவும் புள்ளுமாகிய, கருப்பொருளும் மயங்கியும் மயங்காமையும் வரும். எனவே, உரிப்பொருள் மயங்கிவராது என்றவாறு. மயங்கி வருதல் கலி முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டுகொள்க.

"ஒண்செங் 2கழுநீர்க் கண்போல் ஆயிதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
3குயமண்டாகம் செஞ்சாந்து நீவி" (அகநா.48)

என்றவழி, மருதத்திற்குக் கருப்பொருளாகிய கழுநீரும் குறிஞ்சிக்குரிய வெட்சிப் பூவும் அணிந்தோன் என்றமையாற் கருப்பொருள் மயக்கமாயிற்று. பிறவும் அன்ன. (அகத். 15).

குறிப்பு விளக்கம்

(உரைப்பாட வேறுபாடு): 1. நால்வகை நிலத்தும்.

(மேற்கோள் பாடவேறுபாடு) 2. கழுநீர்த் தண்போல்.


(மேற்கோள் பாடவேறுபாடு) 3. குய்மண்டாகம்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...