ஞாயிறு, 25 அக்டோபர், 2015

குறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி-2)

குறுந்தொகை.வே.சாமிநாதையர் உரை

குறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி-2)

குறுந்தொகை
இங்ஙனம் அமைந்துள்ள புலவர் பெயர்களைக் கொண்டு ஆராய்ந்தால் எட்டுத்தொகையில் முதலில் தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகை என்பது தெரிய வரும். காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பது ஒரு புலவர் பெயர். அவருடைய இயற்பெயர் நச்செள்ளையார் என்பது. விருந்துவரக் கரைந்த காக்கையைப் பாராட்டினமையின் காக்கைபாடினியார் என்ற சிறப்புப்பெயர் அவருக்கு உளதாயிற்று. குறுந்தொகையை முதலில் தொகுக்கையில் நச்செள்ளையார் என்பவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் எனக் குறிக்கப்பட்டார். அப்பால் தொகுக்கப்பட்ட நூல்களில் அவ்வாறே வழங்கப்பட்டார். கயமனார் என்பது ஒரு புலவரின் பெயர். அப்பெயரை அவரது சிறப்புப் பெயராகவே கருத இடம் உண்டு; அவரது இயற்பெயர் தெரியவில்லை, குறுந்தொகையில், கழியில் உள்ள நெய்தல் மலருக்குக் கயத்தில் மூழ்கும் மகளிர் கண்ணை அவர் உவமிக்கின்றனர். கயத்தில் நிகழும் நிகழ்ச்சியைக் கூறுதலின் அப்பெயர் பெற்றார் என்று கொள்ளல் தகும். அவர் இயற்றிய பாடல்கள் பிற தொகை நூல்களிலும் காணப்படுகின்றன. அவ்விடங்களிலும் கயமனார் என்ற சிறப்புப் பெயரே குறிக்கப் பெற்றிருக்கிறது. அவருடைய இயற்பெயர் தெரிந்த காலத்தும் குறுந்தொகையில் அமைத்த பெயரையே பின் தொகுத்த நூல்களிலும் அமைத்தனர் என்றே தெரிய வருகின்றது. இங்ஙனமே கள்ளிலாத்திரையனார் என்பவரது பெயருக்குரிய காரணம் குறுந்தொகையிலுள்ள செய்யுட் பகுதியாகிய, “கள்ளிற் கேளி ராத்திரைஎன்பது. அவர் செய்யுட்கள் புறநானூற்றிலும் வருகின்றன. ஓரேருழவர் என்னும் புலவர் இயற்றிய குறுந்தொகைப் பாட்டில் உள்ள, “ஓரேருழவன் போல’’ என்னும் தொடர் அவரது பெயர்க் காரணத்தைக் குறிப்பிக்கின்றது. புறநானூற்றிலும் அவர் செய்யுள் ஒன்று காணப்படுகின்றது. இவ்விரு புலவர்களும் குறுந்தொகைச் செய்யுட் பகுதி காரணமாகப் பெற்ற பெயராலேயே பின் தொகுத்த புறநானூற்றிலும் குறிக்கப்பட்டனரென்றல் ஏற்புடையதே யன்றோ? இவ்வாறு குறுந்தொகையில் உள்ள சொற்றொடர் காரணமாகப் பெயர் பெற்ற புலவர்கள் அப்பெயராலேயே பிற நூல்களில் வழங்கப் பெறுவது போல அந்நூல்களில் உள்ள செய்யுட்பகுதி காரணமாகப் பெயர்பெற்றாரது பெயர் ஒன்றேனும் குறுந்தொகையில் வரவில்லை. இதனாலும் முதலில் குறுந்தொகை தொகுக்கப்பட்டது என்பது தெளிவாகும்.
    எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் என்னும் முத்திற யாப்புக்களால் ஆனவை. இவற்றின் முறையே செய்யுட்களைத் தொகுக்கத் தொடங்கினவர்கள் முதலில் ஆசிரியப்பாக்களில் தனியாக உள்ள அகப்பாட்டுக்களைத் தொகுத்து அடியளவால் மூன்று பிரிவாக்கிக் குறைந்த அளவை உடைய குறுந்தொகையை முதலில் செப்பஞ் செய்தார்கள் என்று கொள்வது ஒருவகையில் இயைபுடையதாகவே தோன்றுகின்றது. குறிய அளவையுடைய செய்யுட்களாலாயினமையின் இது குறுந்தொகை எனப்பட்டது. நெடிய செய்யுட்களாலான அகநானூறு நெடுந்தொகை எனப்பட்டது.
   குறுந்தொகை என்னும் இத்தொகை நூல் அகப்பொருள் பற்றிய ஆசிரியப்பாக்கள் 401-ஐயும் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றையும் உடையது.
  “இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர். இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது”.
     என்பன இந்நூல் எழுதியுள்ள சுவடிகளில் காணப்படுகின்றன. இத்தொகையைத் தொகுப்பித்தார் இன்னார் என்று தெரியவில்லை. இந்நூற் செய்யுட்களைப் பாடிய புலவர் இருநூற்றைவர் என்று காணப்படினும் பத்துச் செய்யுட்களைப் பாடிய ஆசிரியர் பெயர் ஏடுகளில் இல்லை. இப்பொழுது கிடைத்த அளவிற் பாரதம் பாடிய பெருந்தேவனார் முதல் அம்மூவன் இறுதியாக 206 பெயர்கள் காணப்படுகின்றன. பத்துச் செய்யுட்களின் ஆசிரியர் பெயர் தெரியாத காலத்தும் ஒருவர் பெயர் மிகுதியாகக் காணப்படுகின்றது. எழுதுவோருடைய பிழையால் ஒரே வகையான பெயர்கள் சில வேறு வேறாகத் தோற்றும்படி சில வேறுபாட்டோடு அமைந்திருத்தலாலும் ஓராசிரியருக்குரிய சிறப்புப் பெயர் மட்டும் ஒரு செய்யுளிலும் இயற்பெயர் மட்டும் மற்றொரு செய்யுளிலும் எழுதப்பட்டிருத்தலாலும் வேறு சில காரணங்களாலும் இத்தொகை வேறுபாடு உண்டாகியிருத்தல் கூடும். சங்க காலத்துப் புலவர் பெயர்களில் இங்ஙனம் உள்ள பிறழ்ச்சி ஆராய்ச்சியாளர்க்கு மிக்கத் துன்பத்தை விளைவிக்கின்றது.
  அடியளவு
    இந்நூற் செய்யுட்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையனவென்று மேற்காட்டிய குறிப்பு அறிவிப்பினும் 307, 391-ஆம் செய்யுட்கள் ஒன்பதடியை உடையனவாகக் காணப்படுகின்றன. இவ்விரண்டினுள்ளும் 391-ஆம் செய்யுள் சில பிரதிகளில் எட்டடியை உடையதாகச் சில பாட பேதங்களுடன் எழுதப்பட்டுள்ளது. அதனை எட்டடிச் செய்யுளாகவே கொள்ளினும் மற்றொன்றாகிய 307-ஆம் செய்யுள் ஒன்பதடிகளை உடையதாகவே எல்லாப் பிரதிகளிலும் இருக்கின்றது. அடியளவின்படி தொகுத்த குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்பவற்றுள் பின் இரண்டும் கடவுள் வாழ்த்தொழிய நானூறு செய்யுட்களையே உடையன. அவ்வினத்திற் சேர்ந்த குறுந்தொகையும் 400 செய்யுட்கள் உடையதாகவே கோடல் பொருத்தமாகும். 9 அடிகளை உடைய 307-ஆம் செய்யுளைக் குறுந்தொகையில் சேராதது என்று விலக்கின் இந்நூல் மேலே குறித்த வரையறைக்குள் அடங்கிய 400 செய்யுட்களை உடையதாகின்றது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...