குறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 3)
 பழைய கருத்து
   
இவற்றிற்குரிய பழைய கருத்துக்கள் தொகுத்தவராலேனும் பிற்காலத்தாராலேனும் அமைக்கப் பட்டிருத்தல் வேண்டும். ஒரு செய்யுளுக்கே சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. பிற்காலத்தில் உரை ஆசிரியர்கள் இச் செய்யுட்களை மேற்கோளாகக் காட்டும் இடங்களில் சிலவற்றிற்குப் பழைய கருத்தைக் கூறாமல் வேறு கருத்தை அமைக்கின்றனர். தொகை நூல்களுள் ஒன்றாகிய புறநானூற்றுக்கு அமைக்கப் பெற்ற துறைகள் இங்ஙனமே பிற்காலத்தாராற் சேர்க்கப் பெற்றன என்பதை,
‘‘தத்தம் புதுநூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறைகூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு 
நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறைகூற வேண்டுமென்றறிக’‘        (தொல். புறத்.35, உரை) 
என்னும் நச்சினார்க்கினியர் எழுத்து வெளியிடுகின்றது.
    
முன்பு நிகழ்ந்த சில வரலாறுகளோடு தொடர்புடைய பாட்டுக்களும் இக்குறுந்தொகையிற் சேர்க்கப் பெற்றுத் துறை வகுக்கப்பட்டுள்ளன. இறையனார் தருமியின் பொருட்டு எழுதி அளித்த ‘கொங்குதேர் வாழ்க்கை” (8) என்னும் செய்யுளும், வெள்ளிவீதியார் தம் காதலனைப் பிரிந்த காலத்தில் பாடியனவாகிய, ‘கன்று முண்ணாது” (83), ‘நிலந்தொட்டுப் புகாஅர்” (331) என்பனவும், காதலனை இழந்த ஆதிமந்தியார் பாடிய “மள்ளர் குழீஇய” (93) என்பதும் இவ்வகையினவாகும். நூலிற் கண்ட துறைகள் சிலவற்றில் இரண்டாவதாக அமைந்ததும், சிலவற்றிற்கு உரையாசிரியர்கள் எழுதுவதும் பிறவற்றை விடப் பொருத்தமுள்ளனவாகத் தோற்றுகின்றன.
மேற்கோளாட்சி
   
தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களின் உரைகளிலும் சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களின் உரைகளிலும் இளம்பூரணராகிய உரையாசிரியர்கள் எட்டுத் தொகை நூல்களில் இருந்தும் பல செய்யுட்களையும் செய்யுள் பகுதிகளையும் மேற்கோளாக எடுத்துக் காட்டுகின்றனர். அங்ஙனம் காட்டும் நூல்களுள் ஏனைய தொகை நூல்களைக் காட்டிலும் குறுந்தொகையே மிகுதியாக எடுத்தாளப்படுகின்றது. இதனால் இத்தொகைநூல் செய்யுட்களில் உரையாசிரியர்கள் கருத்துக்கள் பெரிதும் ஈடுபட்டிருந்தன என்று தெரிகின்றது. இந்நூலுள் இப்பொழுது தெரிந்த வரையில் 165 செய்யுட்களே பிற நூல் உரைகளில் மேற்கோளாகக் காட்டப் பெறாதவை. இந்நூலை மேற்கோளாக எடுத்தாண்ட உரையாசிரியர்கள்: 
(1) அகப்பொருள் விளக்க உரையாசிரியர், 
(2) அடியார்க்கு நல்லார், 
(3) அழகிய மணவாளஜீயர், 
(4) இளம்பூரணர். 
(5) இறையனாரகப் பொருளுரை ஆசிரியர், 
(6) கல்லாடர், 
(7) களவியற் காரிகை உரையாசிரியர், 
(8) காரி ரத்ன கவிராயர், 
(9) சங்கர நமச்சிவாயர், 
(10) சாமிநாத தேசிகர், 
(11) சிவஞான முனிவர், 
(12) சேனாவரையர், 
(13) சொக்கப்ப நாவலர், 
(14) தக்கயாகப் பரணி உரையாசிரியர், 
(15) தண்டியலங்கார உரையாசிரியர், 
(16)தமிழ்நெறி விளக்க உரையாசிரியர், 
(17) திருமயிலை யமகவந்தாதி உரையாசிரியர், 
(18) திவ்யப்பிரபந்த ஈட்டு வியாக்யானக்காரராகிய நம்பிள்ளை, 
(19) தெய்வச் சிலையார், 
(20) நச்சினார்க்கினியர், 
(21) பரிமேலழகர், 
(22) புறநானூற்று உரையாசிரியர், 
(23) பெருந்தேவனார், 
(24) பேராசிரியர், 
(25) மயிலேறும் பெருமாள் பிள்ளை, 
(26) மயிலை நாதர், 
(27) யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், 
(28) வைத்தியநாத தேசிகர் 
என்பவர்கள்.
எட்டுத் தொகை நூல்களின் பெயர்களைத் தொகுத்துக் கூறும் வெண்பாவாகிய,
 
                      “நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ 
 
                       றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் 
  
                     கற்றறிந்தா ரேத்துங் கலியோ டகம்புறமென் 
 
                       றித்திறத்த வெட்டுத் தொகை” 
என்பதில் இந்நூல் “நல்ல குறுந்தொகை” என்று பாராட்டப் பெறுகின்றது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக