சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல் : பாலை முதற்பொருள்

தொல்காப்பிய அகத்திணை இயல் : பாலை முதற்பொருள்

11    நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.(அகத்.11)

இது, பாலைக்குக் காலமும் இடனும் உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): நடுவு நிலைத்திணை - நடுவு நிலைத்திணையாகிய பாலையாவது, நண்பகல் வேனிலொடு 1முடிவுநிலைமருங்கின் முன்னிய நெறித்து - நண்பகற்பொழுது வேனிற் காலத்தொடு புணர்ந்து நின்றவழிக் கருதிய நெறியை உடைத்து.

இஃது, இளவேனில் முதுவேனில் என்னும் இருவகைப் பருவத்தின் கண்ணும் வரும். நண்பகற்பொழுது காலமாம் என்பதூஉம், ஆண்டு இயங்கும் நெறி நிலமாம் என்பதூஉம், உணர்த்தியவாறு.

இளவேனிலாவது சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும். முதுவேனிலாவது ஆனித் திங்களும் ஆடித் திங்களும். நண்பகலாவது பகற் பொழுதின் நடுக்கூறு. [முதல் ஏகாரம் பிரிநிலை, இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.]. (அகத். 11)

குறிப்பு விளக்கம்


1. "நிலை என்பது நிலத்திணை. முடிவு நிலைப்பகுதிக்கண் முன்னப்படும். எனவே அத்துணை ஆக்கமின்றி ஒழிந்த மருதமும் நெய்தலும் முடியா நிலமாய் அத்துணைமுன்னப்படாதாயிற்று. இது பாலைக் கென்பதாம். எறபாட்டுக்கு முன்னர்த்தாகிய நண்பகலைப் பாலைக்குக் கூறவேண்டிப் பின் வைத்தாரேனும் பெரும்பொழுதிற்கு முற்கூறுதலின், ஒருவாற்றாற் சிறு பொழுதாறும் முறையே வைத்தாராயிற்று. காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமைகூரச் சோலை தேம்பிக் கூவன்மாறி, நீரும் நிழலும் இன்றி நிலம் பயன் துறந்து, புள்ளும் மாவும் புலம்புற்று இன்பம் இன்றித் துன்பம் பெருகுவதொரு காலமாதலின், இன்பத்திற்கு இடையூறாகிய பிரிவிற்கு நண்பகலும் வேனிலும் சிறப்புடைத்தாயிற்று. " 9,10 சூத்திரங்களை ஒரே சூத்திரமாக்குவர் நச்சினார்க்கினியர்.

கருத்துகள் இல்லை: