புதன், 14 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: பிறர் கூற்றுக்கள்

தொல்காப்பிய அகத்திணை இயல்: பிறர் கூற்றுக்கள்

45. எஞ்சி யோர்க்கு மெஞ்சுதல் இலவே.(அகத்.45)

இதுகாறும் பிரிவின்கண் கூறுதலுரியார் பலருள்ளும் நற்றாயும், செவிலியும், கண்டோரும், தோழியும், தலைமகனும் கூறுங்கூற்றுக் கூறினார். இஃது அவரை யொழிந்த தலைமகட்கும், பாங்கற்கும், பார்ப்பார்க்கும், பாணர்க்கும், கூத்தர்க்கும், உழையோர்க்கும் கூற்று நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இல - முன்னர்க் கூறாது எஞ்சி நின்றார்க்கும் கூற்று ஒழிதல் இல.

'பாங்கர் முதலாயினாரை இச் சூத்திரத்தாற் கூறுப; தலைமகள் கூற்றுத் தனித்துக்கூறல் வேண்டும். இவரோடு ஒரு நிகரன்மையின்' எனின் ஒக்கும். தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப் பழைமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினார் போலும், ஆசிரியர் இச் சூத்திரத் தானும் பொருள் கொள்ள வைத்தமையின், தலைமகள் கூற்று வருமாறு; தலைமகள் பிரிதலுற்ற தலைமகன் குறிப்புக் கண்டு கூறுதலும், பிரிவுணர்ந்து கூறுதலும், பிரிவுணர்த்திய தோழிக்குக் கூறுதலும், உடன் போவல் எனக் கூறுதலும் இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லி விட்டனவும், தமர் வந்துற்றவழிக் கூறுதலும், மீளலுற்றவழி ஆயத்தார்க்குக் கூறிவிட்டனவும், பிரிவாற்றாமையும், ஆற்றுவல் என்பது படக் கூறுதலும், தெய்வம் பராவலும், பருவங்கண்டு கூறுதலும், வன்புறை எதிரழிந்து கூறுதலும் இவையெல்லாம் கூறப்படும்.

பிரியலுற்ற தலைமகன் குறிப்புக்கண்டு கூறியதற்குச் செய்யுள்:

" நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்தும்தாம்
அஞ்சிய தாங்கே1 அணங்காகும் என்னும்சொல்
இன்தீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள்
புதுவது பன்னாளும் பாராட்ட யானும்
இதுவொன் றுடைத்தென எண்ணி அதுதேர
மாசில்வண்2 சேக்கை மணந்த புணர்ச்சியுட்
பாயல்கொண்டு என்தோள் கனவுவார் ஆய்கோல்
தொல்நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்
கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ
இருமருப் பியானை யிலங்குதேர்க் கோடும்
நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்றெம்
செய்பொருண் முற்றும் அளவென்றார் ஆயிழாய்
தாமிடை கொண்ட ததுவாயின் தம்மின்றி
யாமுயிர் வாழும் மதுகை இலே மாயில்
தொய்யில் துறந்தார் அவர்எனத் தம்வயின்
நொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு
போயின்று சொல்லென் உயிர்." (கலி.பாலை.23)

பிரிவுணர்ந்த தலைமகள் தலைமகனுடன் கூறியதற்குச் செய்யுள்

"செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான் றவையெல்லாம்
பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய
அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து
பகன்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்
மகனல்லை மன்ற இனி;
செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி
அன்பற மாறியாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ என்று வருவாரை
என்திறம் யாதும் வினவல் வினவின்
பகலின் விளங்குநின் செம்மல் சிதையத்
தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டோர்
அவலம் படுதலும் உண்டு." (கலி.பாலை.18)

பிரிவுணர்த்திய தோழிக்குக் கூறியதற்குச் செய்யுள்

"அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே." (குறுந்.20)

"செல்லாமை உண்டேல் எனக்குரை3 மற்றுநின்
வல்லரவு வாழ்வார்க் குரை" (குறள் - 1151)

என்பதும் அது.

உடன்போக்கு ஒருப்பட்டதற்குச் செய்யுள்:

"சிலரும் பலருங் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி கானற்
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற்
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
அலர்சுமந் தொழிக இவ் வழுங்கல் ஊரே." (நற்றிணை - 149)

இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லிவிட்டதற்குச் செய்யுள்

"சேட்புல முன்னிய விரைநடை 4அந்தணிர்
நும்மொன் றிரந்தரனன் மொழிவல் எம்மூர்
பாய்நயந் தெடுத்த ஆய்நலங் கவின
ஆரிடை இறந்தனள் என்மின்
நேரிறை முன்கைஎன் ஆயத் தோர்க்கே." (ஐங்குறு - 384)

"கடுங்கட் காளையொடு நெடுந்தேர் ஏறிக்
கோள்வல் வேங்கைய மலைபிறக் கொழிய
வேறுபல அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக்
கூறுமின் வாழியோ ஆறுசெல் மாக்கள்
நற்றோள் நயந்துபா ராட்டி
எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே." (ஐங்குறு - 395)

தமர் வந்துற்றவழிக் கூறியதற்குச் செய்யுள்:

"அறஞ்சா லியரோ அறஞ்சா லியரோ
வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ
வாள்வனப் புற்ற அருவிக்
கோள்வல் என்னையை மறைத்த குன்றே." (ஐங்குறு - 312)

மீண்டுவருவாள் ஆயத்தார்க்குக் கூறிவிட்டதற்குச் செய்யுள்:

"கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
சுரநனி வாரா நின்றனள் என்பது
முன்னுற விரைந்தநீர் உரைமின்
இன்னகை முறுவல் என் ஆயத் தோர்க்கே." (ஐங்குறு - 397)

பிரிவாற்றாமைக்குச் செய்யுள்:

"அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்." (குறள். 1153)

"அஞ்சுவல் வாழி தோழி சென்றவர்
நெஞ்சுணத் தெளித்த நம்வயின்
வஞ்சஞ் செய்தல் வல்லின வாறே."
அரும்பெறற் காதல ரகலா மாத்திரம்
இரும்புதல் ஈங்கை இளந்தளிர் நடுங்க
அலங்குகதிர் வாடையும் வந்தன்று
கலங்கஞர் எவ்வந் தோழிநாம் உறவே."

இவை பிரிந்தார் என்றவழிக் கூறியன.

ஆற்றுவல் என்பதுபடக் கூறியதற்குச் செய்யுள்:

"தோளுந் தொடியும் நெகிழ்ந்தன நுதலும்
நெய்யுகு பள்ளி யாகுக தில்ல
யான ஃதவலங் கொள்ளேன் தானஃ
தஞ்சுவரு கான மென்றதற்
கஞ்சுவல் தோழி நெஞ்சத் தானே."

தெய்வம் பராஅயதற்குச் செய்யுள்:

"புனையிழாய் ஈங்குநாம் புலம்புறப் பொருள் வெஃகி
முனையென்னார் காதலர் முன்னிய ஆற்றிடைச்
சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக்
கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ."(கலி.பாலை. - 15)

பருவங்கண்டு கூறியதற்குச் செய்யுள்:

"என்னொடு புலந்தனர் கொல்லோ காதலர்
மின்னொடு முழங்குதூ வானம்
நின்னொடு வருதும் எனத்தெளிந் தோரே."

வன்புறை எதிரழிந்து கூறியதற்குச் செய்யுள்:

"வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய் தோன்றார்
பொறுக்கவென் றாற்பொறுக்க லாமோ - ஒறுப்பபோற்
பொன்னுள் உறுபவளம் போன்ற புணர்முருக்கம்
என்னுள் உறுநோய் பெரிது."(திணைமாலை - 67)

தூதுவிடக் கூறியதற்குச் செய்யுள்

"காண்மதி பாணநீ உரைத்தற் குரியை
துறைகெழு கொண்கன் பிரிந்தென
இறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே."(ஐங்குறு - 140)

ஆயத்தார் கூறியதற்குச் செய்யுள்:

மாந்தர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி
தான்வரும் என்ப தடமென் தோழி
அஞ்சினன் அஞ்சினன் ஒதுங்கிப்
பஞ்சு மெல்லடிப் பரல்வடுக் கொளவே."

பாணர் கூறியதற்குச் செய்யுள்:

நினக்கியாம் பாணரும் அல்லேம் எனக்கு
நீயுங் குருசிலை அல்லை மாதோ
நின்வெங் காதலி நன்மனைப் 5புலம்பி
ஈரிதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டும் அருளா தோயே."(ஐங்குறு - 480)

பார்ப்பார் கூறியதற்குச் செய்யுள்:

"துறந்ததற் கொண்டு துயரடச் சாஅய்
அறம் புலந்து பழிக்கும் அளைக ணாட்டி
எவ்வ நெஞ்சிற் கேம மாக
வந்தன ளேநின் மடமகள்6
வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே."(ஐங்குறு - 393)

(அகத். 45)

குறிப்பு விளக்கம்

(பாடவேறுபாடு): 1. தெல்லாம்.

2. மாசில்வன்.

3. எமக்குரை.

(பாடவேறுபாடு): 4. அசைநடை.

(பாடவேறுபாடு): 5. தன்மனைப்


6. வந்தனளோ நின்மகளே.

கருத்துகள் இல்லை: