ஞாயிறு, 11 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: ஏவல்மரபினரும் உரியர்

தொல்காப்பிய அகத்திணை இயல்: ஏவல்மரபினரும் உரியர்

26.ஏவல் மரபின் ஏனோரும்1 உரியர்
ஆகிய நிலைமை அவரும் அன்னர்.(அகத்.26)

இதுவும், கைக்கிளை பெருந்திணைக்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): ஏவல் மரபின் ஏனோரும் உரியர்- (மேற்சொல்லப்பட்ட அடியோரும் வினைவலரும்) ஏவுதல் மரபையுடைய ஏனையோரும் (கைக்கிளை பெருந்திணைக்கு)உரியர்; அவரும் ஆகிய நிலைமை அன்னர் - அவரும் உரியராகிய நிலைமை அத்தன்மைய ராகலான்.

அவருமாகிய நிலைமை என மொழிமாற்றுக. கைக்கிளை பெருந்திணை என்பது அதிகாரத்தான் வந்தது. இதனாற் சொல்லியது தலைமக்களும் கைக்கிளை பெருந்திணைக்கு உரியராவர் என்பதாம்.உரியராயினவாறு அறம் பொருள் இன்பங்கள் வழுவ மகளிரைக் காதலித்தலான் என்றவாறாயிற்று.

ஏஎ இஃதொத்தான் நாணிலன் தன்னொடு
மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்றும்
மேவினு மேவாக் கடையும் அஃதெல்லா
நீயறிதி யானஃ தறிகல்லேன் பூவமன்ற
மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான்
புல்லினி தாகலிற் புல்லினேன் எல்லா
தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா
செய்வது நன்றாமோ மற்று;
சுடர்த்தொடீ,
போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள்
வேட்டார்க் கினிதாயின் அல்லது நீர்க்கினிதென்
றுண்பவோ நீருண் பவர்;
செய்வ தறிகல்லேன் யாதுசெய் வேன்கொலோ
ஐவாய் அரவின் இடைப்பட்டு நைவாராம்
மையின் மதியின் விளங்கு முகத்தாரை
வௌவிக் கொளலும் அறனெனக் கண்டன்று;
அறனு மதுகண்டற் றாயிற் றிறனின்றிக்
கூறுஞ்சொற் கேளான் நலிதரும் பண்டுநாம்
வேறல்ல மென்பதொன் றுண்டால் அவனொடு
மாறுண்டோ நெஞ்சே நமக்கு." (கலி.குறிஞ்.26)

இதனுள் வௌவிக் கொளலும் அறனெனக் கண்டன்று எனவும் நீர்க்கினிதென் றுண்பவோ நீருண்பவர்"எனவும் தலைமகன் கூறுதலானும் தலைமகள் முன் இழித்துரைத்தலானும், ஊடியுணர்வாள் போல உடன்பட்டமையானும், இஃது உயர்ந்தோர்மாட்டு வந்த கைக்கிளை பெருந்திணை வந்தவழிக் கண்டுகொள்க. (அகத். 26).

குறிப்பு விளக்கம்


1. "ஏனோரும் - நால்வகை வருணமென்று எண்ணியவகையினால் ஒழிந்துநின்ற வேளாளரும்" (நச்சி.)

கருத்துகள் இல்லை: