சனி, 3 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 25

இலக்கணம் - பொருளிலக்கண நூல்கள்

அகப்பொருள் விளக்கம் (12 நூற்.)

1.         அகப்பொருள் விளக்க ஆசிரியர்?
நாற்கவிராச நம்பி (நால்வகைக் கவிகளும் வல்ல நம்பி என்பது பொருள். இவர் சமண சமயத்தவர் ஆவர்).

2.         துறைவகையால் அகப்பொருளைக் கூறும் நூல்?
அகப்பொருள் விளக்கம் (நம்பி அகப்பொருள் எனவும் அழைக்கப்படும். அகப்பொருளைத் துறைவகையால் விளக்கிய திருக்கோவையாரைப் பின்பற்றி, அந்நூற்துறைகளுள் வேண்டியன கொண்டு விளக்கிய நூல் நம்பி அகப்பொருளாகும்).

3.         நம்பி அகப்பொருள் நூற்பகுப்பு?
அகத்திணையியல், களவியல். வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்தியல்களும் 252 நூற்பாக்களும் கொண்டது.

4.         நம்பியகப்பொருள் உரைகாரர்?
நாற்கவிராச நம்பியே உரை எழுதினார் என்றும், உரையாசிரியர் நம்பியன்று: வேறொருவர் என்றும் இரு கருத்துக்கள் கூறப்படினும், நம்பியகப்பொருள் விளக்கச் சிறப்புப்பாயிரம் கூறுமாற்றால் நூலாசிரியர் நாற்கவிராச நம்பியே அந்நூலின் உரைகாரர் என்றும் கூறுவர். (நம்பி செய்த உரையும், வேறொருவர் செய்த தஞ்சைவாணன் கோவைப் பாடற் சான்றுகளோடு கூடிய உரையும் இருந்தன என்றும், அவற்றை ஒர் உரையாகக் கருதிப் பதிப்பாசிரியர்கள் பதிப்பித்ததால் இக்குழப்பம் நேர்ந்தது என்றும் கூறுவர் இரா. இளங்குமரனார், இலக்கண வரலாறு (1990), பக்.319 – 320).

5.    நம்பியகப்பொருளுக்குச் சான்றாக விளங்கும் நூல்?
பொய்யாமொழிப்புலவர் பாடிய தஞ்சைவாணன் கோவை.
கருத்துரையிடுக