திங்கள், 19 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 57

இலக்கணம் - நிகண்டுகள்


6.         சூடாமணி நிகண்டு குறிப்பு வரைக?
சூடாமணி நிகண்டின் ஆசிரியர் மண்டல புருடர். கணபத்திரர் என்ற சமணப் பெரியோரின் மாணவராகிய இவர், தம் ஆசிரியர் கட்டளையாலும் பிறருடைய வேண்டுகோளாலும் திவாகரம், பிங்கலம் ஆகிய நிகண்டுகளைத் தழுவிச் சூடாமணி நிகண்டினைச் செய்தார். 12 தொகுதிகளுடைய இந்நூலில் 1189 பாடல்களும் 11000 சொற்களும் உள.

7.         அகராதி நிகண்டு பற்றிக் கூறுக?
அகராதி நிகண்டின் ஆசிரியர் இரேவணசித்தர். இவருக்குப் புலியூர்ச் சிதம்பர இரேவண சித்தர் என்றும் பெயருண்டு. அகராதி நிகண்டு சூத்திர நடையில் அமைந்த நூலாதலின் இரேவண சூத்திரம் என்றும், அகராதியாதலின் சூத்திர அகராதி என்றும் வேறு பெயர்களுண்டு. இதன் காலம் 16ஆம் நூற்றாண்டு ஆகும். ஒருசொல் பல்பொருள் பெயர்ப் பிரிவைச் சார்ந்த இந்நூல் பத்துத் தொகுதிகளைக் கொண்டது. 3368 நூற்பாக்கள் உள. தமிழில், நிகண்டுகளில் முதன்முதலாக அகரவரிசையில் அமைந்த நூல் இதுவாகும். ஒரே பொருளுடைய சொல் முதல் 46 பொருளுடைய சொற்களும் இந்நிகண்டில் விளக்கப்பட்டுள்ளன.

8.         ரிச்சொல் நிகண்டு குறிப்பு வரைக.
ரிச்சொல் நிகண்டின் ஆசிரியர் காங்கேயர். வெண்பாவால் இயற்றப்பட்ட இந்நூல் பத்துத் தொகுதிகளைக் கொண்டது. 3200 சொற்களும் 287 வெண்பாக்களும் உள. இந்நூலின் காலம் 14ஆம் நூற்றாண்டு என்றும், 17ஆம் நூற்றாண்டு என்றும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. முதன்முதலாக இந்நூல் 1840இல் வெளியானது என்பர்.

9.         கயாதர நிகண்டு பற்றிக் கூறுக?
கயாதரர் இயற்றிய நூல் கயாதர நிகண்டு.  கயாதரர் தம்மைக் தேவையதிபன், தேவைக்கெயாதரன், தேவை நன்னாடன் எனக் குறிப்பிட்டுள்ளார் (தேவை என்பது இராமேசுவரம் ஆகும்). 11 பகுதிகளுடைய இந்நூற்பகுதிகள் இயல் எனப் பெயர் பெற்றுள்ளன. ஒவ்வொரு இயல் முடிவிலும் தம் வரலாறு, பெயர் ஆகியவற்றைக் கயாதரர் குறித்துள்ளார். நூல் முழுவதும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. கயாதரர் அந்தாதி நூலும், இராமேசுவரக் கோவை என்ற கோவை நூலும் இயற்றியுள்ளார் என்பர். இவர் காலம் 17ஆம் நூற்றாண்டு. கயாதர நிகண்டை 1939இல் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்துள்ளார்.

10.       பல்பொருள் சூடாமணி நிகண்டு குறிப்புரைக்க?
நூலாசிரியர் ஈசுவர பாரதியார். ஒரு சொல் ஒரு பெயர்க்காண்டம், ஒரு சொல் பல்பொருள் காண்டம், பல்பெயர்க் கூட்டத்து ஒரு பெயர்க் காண்டம் என்ற மூன்று பிரிவுகளாக அகரவரிசையில் அமைந்துள்ளது இந்நூல். இவர்காலம் 18 ஆம் நூற்றாண்டு. பல்பொருள் சூடாமணி நிகண்டு 13-08-1700இல் இயற்றப்பட்டது. இதனை ஈசுவர பாரதியார், திருத்தியும் விரிவாக்கியும் இரையூர் வடமலை நிகண்டு என்ற வேறுபெயரிட்டார் எனக் கருதுவர். இந்நிகண்டு மூன்றுகாண்டங்களாக அமைந்தது. இதில் இரண்டாம் காண்டம் மட்டும் முற்றும் கிடைத்துள்ளது. இவ்விரண்டாம் காண்டம் 10 தொகுதிகளையும் 1452 சூத்திரங்களையும் கொண்டது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...