ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பெரியாரும் உலகப் பகுத்தறிவாளர்களும் – நாடளாவிய கருத்தரங்கு 17.09.2011


    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட பெரியார் உயராய்வு மையத்திற்குக் கடந்த மார்ச்சுத் திங்களில் தான் நிரந்தரப் பேராசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டது. அம்மையத்தின் முதல் பேராசிரியராகவும் தலைவராகவும் முனைவர் இரா. அறவேந்தன் அவர்கள் பணியேற்றுள்ளார்.  பெரியாரியக் கருத்துக்களை இளந்தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் நாடளாவிய கருத்தரங்கு ஒன்றினை 17.09.2011 அன்று அவர் ஒருங்கிணைத்து நடத்தினார். எளிமைக்குணம் உடையவர்; பழகுதற்கு இனியவர்; கடுமையாக உழைப்பதையே தம் பண்பாகக் கொண்டவர்; திட்டமிட்டுச் செயலாற்றும் அவர்தம் தகைமையால் மிகச் சிறப்பாக நடைபெற்ற அக்கருத்தரங்கு தமிழர்; பெரியார் தொண்டர்கள் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் தன்மையுடையது.
பெரியார் சிந்தனைகளைத் தொகுத்தளித்த மானமிகு ஆனைமுத்து அவர்களுக்குப் பெரியார் சிறப்பு விருதும், பெண்ணிய முன்னேற்றத்திற்குப் பாடுபட்டுவரும் திருவாட்டி பாத்திமா வெங்கடேசன் அவர்களுக்குப் பெரியார் விருதும், பெரியாரியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றிவரும் மானமிகு பசு. கவுதமன் ஆவர்களுக்குப் பெரியார் பரிசும் அவ்விழாவில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்தரங்கத் தொடக்கவிழாவில் சிறப்புரையாற்றிய முன்னை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் திருமிகு கலியமூர்த்தி அவர்களின் உரை, தமிழ்ப் பேராசியர்களும்  கவனிக்கவேண்டிய உரை. மடைதிறந்த வெள்ளம் போல் அவர் அடுக்கிய புறநானுற்று, நாலடியார், நன்னெறி, கொன்றைவேந்தன், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து பாடல்களும், குறிப்புக்கள் ஏதுமில்லாமல் சொல்லவரும் கருத்தினைத் தெளிவுபட எடுத்துரைத்த பாங்கும் சொற்பொழிவாளராக விழையும் ஒவ்வொருவரும் கைக்கொள்ளவேண்டிய சிறப்புக்கள்.
பன்முகச் சிறப்புக்களுடைய இக்கருத்தரங்கில் தந்தை பெரியாரின் கருத்தியல் புலப்பாட்டுநெறிகள் என்ற பொருண்மையில் நான் கட்டுரை படித்தேன்.  கருத்தரங்கக் காட்சிகள் இவை:

முன்னை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் திருமிகு கலியமூர்த்தி அவர்களின் உரை


கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்களின் உரை

தந்தை பெரியாரின் கருத்தியல் புலப்பாட்டுநெறிகள் என்ற பொருண்மையிலான என்னுடைய ஆய்வுரை
கருத்துரையிடுக