வெள்ளி, 23 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 63

இலக்கணம் - நிகண்டு - அகராதிகள்


33.       18ஆம் நூற்றாண்டு அகராதிகளை விளக்குக?
1. சீகன் பால்கு தொகுத்த அதராதிகளாவன: அ. டிக்வினேரியம் தமுலிகம்: கிபி 1712இல் சீகன்பால்கு தொகுத்த இவ்வகராதி இன்னும் (1985வரை) அச்சாகவில்லை என்பர்.
ஆ. தமிழ் இலத்தீன் அகராதி : 1715 - 16இல் தமிழ் - இலத்தீன் அகராதியைச் சீகன் பால்கு வெளியிட்டுள்ளார்.
இ. தமிழ் உரைநடை அகராதி : சீகன் பால்கு இவ்வகரதியைச் 1726இல் தொகுத்து ஜெருமானிய மொழியில் அடைவு செய்துள்ளார். அச்சாகாத (1985 வரை) இவ்வகராதியின் பெயர் :  PROSAISCH- TAMULISCHES LEXICON என்பதாகும்.
ஈ. அகராதி பேர்சுவடி: 1732இல் சீகன் பால்குவால் கொகுக்கப்பட்ட இத்தமிழகராதியும் அச்சாகவில்லை (1985வரை) என்பர்.
2. வீரமாமுனிவரின் அகராதிகள்:
அ. சதுரகராதி : வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதி 1732இல் எழுதப்பட்டது. இதனை முதன்முதலாகப் பதிப்பித்தவர் ஜே. வின்சர் என்பவராவார். இவ்வகராதி 1. பெயரகராதி 2. பொருள் அகராதி 3. தொகையகராதி 4. தொடையகராதி ஆகிய பகுதிகளைக் கொண்டதாகும். இந்நான்கனுள் பொருளகராதி திருச்சிற்றம்பல ஐயர் உதவியோடு 1819இல் எல்லீஸ் என்பவரால் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது. அகராதியின் முழுப் பகுதியும் தாண்டவராய முதலியார், இராமச்சந்திர கவிராயர் ஆகியோர்  மேற்பார்வையில் 1824இல் வெளியிடப்பட்டது. உரைநடையில் அமைந்த இவ்வகராதியே முறையான முதல் தமிழ் அகராதியாகும். அகராதி என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற அகராதி இதுவாகும்.
ஆ. தமிழ் - இலத்தீன் அகராதி: அச்சுருப் பெறாத இவ்வகராதியை 1742 இல் 9000 சொற்கள் இடம்பெற்றுள்ளன. வட்டார வழக்குத் தமிழ் சொற்களுக்குப் பொருள் கூறும் தமிழ் இலத்தீன் அகராதியும் வீரமாமுனிவரால் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகராதி 1882இல் திருச்சியில் வெளியானது.
இ. இலத்தீன் - தமிழ் அகராதி : இவ்வகராதியும் வீரமாமுனிவரால் தொகுக்கப்பட்டது என்றும், இதைப்பற்றிய வேறு செய்திகளை அறியமுடியவில்லை என்றும் கூறுவர்.
ஈ. தமிழ் - பிரெஞ்சு அகராதி: 1744இல் வீரமாமுனிவர்  தொகுத்த இவ்வகராதி 1806இல் மையொற்றுப்படியாகப் (Cyclostyle) பதிப்பிக்கப்பட்டுள்ளது.
2.  தமிழ் - ஆங்கில அகராதி : வீரமாமுனிவரால் தொகுக்கப்பட்ட இவ்வகராதி பற்றிய வேறு செய்திகள் கிடைக்கவில்லை என்பர்.
ஊ. போர்ச்சுகீசியம் - இலத்தீன் - தமிழ் அகராதி: Lexicon Lusitano Lationo tamulicum என்ற பெயருடைய இவ்வகராதியின் காலம் 1742. இவ்வகராதி அச்சுப்பெறவில்லை என்பர்.
எ. வட்டார வழக்குத் தமிழ் அகராதி :  வீரமாமுனிவர் தொகுத்த இவ்வகராதி பற்றிய வேறு செய்திகள் கிடைக்கவில்லை என்பர்.
3. பெப்ரிஷியஸ் தமிழ் ஆங்கில அகராதி:
பெப்ரிஷியஸ், பிரெய்தாப்ட் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இருமொழி அகராதியாகிய இது 1778இல் சென்னையில் அச்சிடப்பட்டது. இவ்வகராதியே அச்சில் வெளிவந்த முதல் தமிழ் - ஆங்கில அகராதியாகும். 900 பதிவுகளைக் கொண்ட (Entries) இதன் இரண்டாம் பதிப்பு 1809இல் வெளியானது.
4. ஆங்கிலம் - தமிழ் அகராதி: A Dictionary of the English and Malabar  என்னும் பெயரில் 1786இல் வெளிவந்த ஆசிரியர் பெயர் அறியப்படாத இவ்வகராதி தமிழை மலபார் எனக் குறித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...