ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 72

இலக்கணம் -  மறைந்த இலக்கண நூல்கள் ( மீட்டுருவாக்கம் பெற்றவை)


அவிநயம் (9ஆம் நூற்.)

1.   அவிநயம் நூலாசிரியர்?
அவிநயனார் என்ற சமணர்.

2.   அவிநயம் கூறும் இலக்கணப் பகுதிகள்?
எழுத்து, சொல், பொருள் ஆகியன. அவிநயமும் அதன் உரையும் கிடைக்காமையால் யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகைஉரை ஆகியவற்றிலிருந்து 130 அவிநய நூற்பாக்களைத் தொகுத்து அவிநயம் என்ற பெயரில் வெளியிட்டவர் க.ப. அறவாணன் (1975இல்). அவரே உரையும் எழுதியுள்ளார். அவிநயனார் அவிநய யாப்பு, அவிநயப் புறனடை அல்லது நாலடி நாற்பது, பன்னிருபடலக் காஞ்சிப்படலம் ஆகியவற்றையும் எழுதினார் என்பர்.

3.   அவிநயப் பழையவுரைகாரர்?
இராசபவித்திரப் பல்லவதரையன்.

4.   அவிநயன் நூல் என அவிநயத்தைக் கூறும் உரைகாரர்?
மயிலைநாதர் (நன்னூல் 359ஆம் நூற்பா உரை).

5.   அவிநயத்தை மேற்கோளாகக் காட்டிய உரைநூல்கள் யாவை?
யாப்பருங்கல விருத்தி உரை (67 இடங்கள்), யாப்பருங்கலக் காரிகை உரை (7 இடங்கள்), நேமிநாதஉரை (28 இடங்கள்), ச்சணந்திமாலை உரை, வீரசோழிய உரை (3 இடங்கள்), நன்னூல் மயிலைநாதர் உரை (13 இடங்கள்), நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை (2 இடங்கள்), பன்னிருபாட்டியல் (9 இடங்கள்), நவநீதப்பாட்டியல் உரை (2 இடங்கள்), தக்க யாகப்பரணி உரை (1 இடம்), நுண்பொருள் மாலை (1 இடம்) ஆகிய 11 உரைநூல்கள் சுட்டியுள்ளன.

6.    தமிழுக்கே உரிய சிறப்பெழுத்துக்களை முதலில் எடுத்து விளக்கியவர்?
அவிநயனார் (, ஒ ஆகிய உயிரெழுத்துகளும் ற,ன.ழ ஆகிய மெய்களும் தமிழுக்கே உரிய சிறப்பெழுத்துக்களாகும் (அவிநயம் 114ஆம் நூற்பா).

7.    அவிநயனார் எழுதிய நூல்கள்?
அவிநயம் (எழுத்து, சொல், பொருள், அடங்கியது), அவிநயனார் யாப்பு (யாப்பிலக்கணம்), அவிநயப் புறனடை அல்லது நாலடி நாற்பது (யாப்பிலக்கணப் புறநடை பன்னிருபடலம் புறத்திணைக் காஞ்சிப் படலம்.

8.   அவிநயனார் கூறிய வண்ணங்களின் எண்ணிக்கை?
100 வண்ணங்கள்.

9.   அவிநயப் பாட்டியல் கூறும் ஆண்பாலின் ஏழு பருவங்கள்?
1.  பாலன் - வயது – 1 - 7  வரை.
2. மீளி - வயது 8 – 10 வரை.
3. மறவோன் - வயது 11 - 14 வரை.
4. திறலோன் - வயது 15.  
5. காளை - 16 வயது.
6. விடலை - வயது 17 – 30 வரை.
7. முதுமகன் 30 வயதுக்குமேல்.


கருத்துரையிடுக