ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 27

இலக்கணம் - பொருளிலக்கண நூல்கள்


தமிழ் நெறி விளக்கம் (10 நூற்.)

1.         தமிழ்நெறி விளக்கம் பற்றிக் கூறுக?
தமிழ்நெறி விளக்கத்தின் ஆசிரியர் யாரெனத் தெரிந்திலது. இதன் முதற்பகுதியும் நிறைவுப் பகுதியும் இல்லாதுபோகப் பொருளியல் என்ற ஓரியலின் 25 நூற்பாக்களும் அவற்றின் உரைகளும் மட்டுமே கிடைத்துள்ளன. இதனை முதன்முதலாகப் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர் (1937 இல்). இந்நூலில் களவில் 81 துறைகளும் கற்பில் 54 துறைகளுமாக மொத்தம் 135 துறைகள் விளக்கப்பட்டுள்ளன. நெய்தலுக்குரிய இரங்கற் பறையை அழப்பறை (பிணத்திற்குக் கொட்டும் சாப்பறை) என்பர் இந்நூலாசிரியர் (பொருளியல் 11 நூற்பா).

களவியற்காரிகை (13 நூற்.)

1.         களவியற் காரிகை விளக்குக?
நூலாசிரியர் பெயர் அறியப்படாத நூல் இது. இதன் பெயரும் தெரியவில்லை. இந்நூலுக்குக் களவியற்காரிகை எனப் பெயரிட்டவர் இதன் முதற்பதிப்பாசிரியராகிய எஸ். வையாபுரிப்பிள்ளை. பின்னர் 1973 இல் இரா. இளங்குமரனார் இந்நூலைத் திருத்தங்களோடு பதிப்பித்துள்ளார். அப்பதிப்பு அகப்பொருள் (இளங்குமரனாரால் தரப்பட்ட தலைப்பு), களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றுண்டு. அவ்வுரையில் காட்டப்பெறும் பாடல்களுள் திருக்கோவையார் முதலிடம் பெற்றுள்ளது. இவ்வுரையின் காலம் 14 ஆம் நூற்றாண்டு என்பர்.
கருத்துரையிடுக