செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மரபிலக்கணப் பார்வையில் இடைச்சொல்


    (அமெரிக்க வாழ் நட்பினர் திருமதி வைதேகி அவர்கள் தாமே தமிழ் இலக்கியங்களைக் கற்று, இணையத்தில் தமிழ்ப்பணி செய்து வருபவர். அவர் இடைச்சொல் பற்றிக் கட்டுரை ஒன்று எழுதுமாறு வேண்டினார். பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் அதனைத் தம் வலைப்பூவில் வெளியிடுவதாகக் கூறினார். அதன்படி எழுதப்பட்ட இக்கட்டுரை இங்கும் தரப்படுகின்றது. பயன்கொள்க). 


மரபிலக்கணப் பார்வையில் இடைச்சொல்
                                                                                                                                           முனைவர் ஆ. மணி,
                                                      துணைப் பேராசிரியர்,
                                                       தமிழ்த்துறை,
                                                    தாகூர் கலைக்கல்லூரி,
புதுச்சேரி – 8,
manikurunthogai@gmail.com

                               
உரைக்களம்
                தொல்காப்பியம் முதலான இலக்கணநூல்களில் கூறப்பட்டுள்ள இடைச்சொல் பற்றிய கருத்துக்களை அறிமுக நோக்கில் எடுத்துரைப்பது இவ்வுரையின் நோக்கமாகும். தொல்காப்பியம், நன்னூல், வீரசோழீயம், இலக்கணவிளக்கம், தொன்னூல் விளக்கம், சுவாமிநாதம் முதலான இலக்கண நூல்களும் அவற்றின் உரைகளும் இடைச்சொல் பற்றிய ஆய்வுகளும் இவ்வுரை முயற்சிக்குத் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

இடைச்சொல் – பெயர் விளக்கம்
                பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய சொற்களின் முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடையிலே அதாவது சொல்லின் நடுவிலே வருதலால் இடைச்சொல் எனப் பெயர் பெற்றது என்பது சேனாவரையர் கருத்து (சிவலிங்கனார் 1986: 1). நச்சினார்க்கினியர், சேனாவரையர் கருத்தினையே கூறிச்சென்றுள்ளார் (மேலது: 10).

                சேனாவரையர் கருத்திலிருந்து மாறுபட்டுப் பெயரும் வினையும் இடமாக நின்று பொருள் உணர்த்துவதால் இடைச்சொல்லாயிற்று என்பது தெய்வச்சிலையார் தரும் விளக்கமாகும் (மேலது:10). கல்லாடனார் தெய்வச்சிலையாரின் கருத்தையே மொழிந்துள்ளார் (மேலது:2). சுப்பிரமணிய சாஸ்திரியாரும் இக்கருத்தினரே (மேலது: 34).

                பெயர், வினைச் சொற்களும் ஆகாது அவற்றின் வேறும் ஆகாது இடைநிகரனவாக நிற்றலால் இடைச்சொல் என்பது சிவஞானமுனிவர் கருத்து எனக் கூறுவர் வெள்ளைவாரணர் (மேலது: 2), மோ. இசரயேல் (1977: 2-3), தமிழண்ணல் (2003: 185), ப. வேல்முருகன் (2006: 21) ஆகியோர். ஆனால் சிவஞானமுனிவரின் விளக்கத்தைப் பார்க்கும்பொழுது (தண்டபாணி தேசிகர் 1983: 396-397) இக்கருத்து ஏற்புடையதாகத் தோன்றவில்லை. ஏனெனில் சிவஞான முனிவரின் விளக்கத்தில் மேற்கருத்தினைத் தொடர்ந்து, “இனி இடை நிகரனவாய் நிற்றலின் இடைச்சொல் எனக் காரணக்குறி போந்ததூஉமன்றித் தனித்து நடத்தலின்றிப் பெயர், வினைகளிடமாக நடத்தலின், இடைச்சொல் எனக் காரணக்குறி போந்ததெனினும் அமையும். அது முதனூலாதலின் வழியாக நடக்கும் நூலை அங்ஙனங்கூறாது வழிநூல் என்றாற்போலப் பெயர்வினைகளிடமாக நடக்குஞ்சொல்லை அங்ஙனங்கூறாது இடைச்சொல் எனப்பட்டது. அங்ஙனமாயின் இடமென இயற்சொல்லாற் கூறாது இடையெனத் திரிசொல்லாற் கூறியது என்னையெனின்: இயற்சொல்லாற் கூறின் இடப்பொருளை உணர்த்துஞ் சொல்லெனப் பொருள்படுமாதலின் அதனோடு இதற்கு வேற்றுமை தோன்றற் கென்க” (பவணந்திமுனிவர் 1983: 396-7) எனவரும் பகுதி, சிவஞானமுனிவர் இருவகைக் கருத்தும் உடையவர் என்பதை உணர்த்துவதைக் காண்க. ஆறுமுக நாவலர் (1984:316), சிவலிங்கனார் (1986: X), ஆகியோர் சிவஞான முனிவரைப் போன்றே இரு கருத்துக்களையும் உரைத்துள்ளனர்.

                ஆதித்தர்இடைச்சொல்லாவது யாது? தான் சேர்ந்த இடத்தாற் பொருள் வலியுறுஞ்சொல்என்றும், தமக்கு ஒரு குறிப்புப் பொருள் இருந்தும் பெயர், வினைகளோடு இடம்பெற்றே தெளிபொருள் தருஞ்சொல் இடைச்சொல்” (சிவலிங்கனார் 1986: 2-3) என்றும் விளக்கம் தந்துள்ளார்.

                இடைச்சொற்களுள் சில பெயர், வினைச்சொற்களைத் திரித்தும் சுருக்கியும் இலக்கணக்குறியீடாக அமைத்துக் கொள்ளப்பட்ட இடுங்கிய சொற்களாக வருவனவாகவும், ஒரு சில பெயர், வினைச்சொற்களுக்கு இடைநிகரனவாகவும், ஒரு சில பெயர், வினை, திணை, பால், இடம், காலம் முதலியவற்றைக் காட்டும் உறுப்புகளாக இடப்படுவனவாகவும் அமைவதால் இவையனைத்தும் பொதுவாக இடைச்சொல் என்னும் காரணக்குறியீடு பெற்றன என்பது ச. பாலசுந்தரத்தின் கருத்தாகும் (சிவலிங்கனார் 1986: 5).

                உரைகாரர்களுள் சுப்பிரமணிய சாஸ்திரியார் (மேலது: 3-4), ஆய்வாளர்களுள் மோ. இசரயேல் (1977: 3), ப. வேல்முருகன் (2006: 21) ஆகியோர் இடையிலே வருவதால் இடைச்சொல் என்ற கருத்தை (சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் இக்கருத்தினர்) மறுத்துள்ளனர். மேலும் இடச்சொல்லே இடைச்சொல் என்ற தெய்வச்சிலையாரின் கருத்தையே வழிமொழிந்துள்ளனரேயன்றிப் புதிய கருத்து எதனையும் கூறவில்லை என்பதை அறியமுடிகின்றது. இசரயேல், இடச்சொல் என்பதே போலியாக இடைச்சொல் என்றாயிற்று. சொல்நிலை பெறுவதில் இடைப்பட்ட இயல்பை உடையன (1977: 3) எனக் கூடுதல் விளக்கம் தருவர்.

                போலி என்பது தனிச்சொற்களில் தான் அதாவது அறம் - அறன், சாம்பல் - சாம்பர், மயல் - மையல், சமையம் - சமயம் என வரும். கூட்டுச்சொல்லாகிய இடைச்சொல் என்பதில் இடைப்போலி வருமெனக் கருதுவது பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. எனவே இடைச்சொல் என்பதற்கே பொருள் காண்பது பொருத்தமுடையது.

                தொல்காப்பியத்தில் இடை என்ற சொல் பிறப். 8, புணரி. 12, தொகை. 26, உரு. 14; 19; 27, உயிர்.1;3;69, புள்ளி. 89; 95, குற். 9; 26; 32; 34; 69 70; 76, புறத்.17, களவி.22 போன்ற இடங்களிலும், இடையிட்ட (புறத்.19), இடையூறு (களவி.11), இடையிருவகையோர் (மரபி.77), இடையிடின் (செய்.95), இடையிடை மிடைந்தும் (செய். 149), கூற்றிடை வைத்த (செய். 158), பாட்டிடை வைத்த (செய்.166), பாட்டிடைக் கலந்த (செய். 173), மரபிடை தெரிய (பொருள்.2) ஆகிய தொடர்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்விடங்களில் பெரும்பான்மையும் இடை என்ற சொல் இடையே அதாவது உள்ளே என்ற பொருளிலேயே வழங்குவதைக் காணமுடிகின்றது. அதனைப் போன்றே இடைச்சொல் என்பதை சொல்லின் உள்ளே இணைந்து வழங்கும் சொல் எனக் கொள்வது ஏற்புடையதாகலாம். இடைச்சொல்லானது சொல்லின் முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும் ஆகிய இயல்பினை உடையது என்ற தொல்காப்பியக் கருத்தினைக் (தொல்.இடை.3) காண்க. இடைச்சொல் சொல்லின் நடுவிலே வரும் எனத் தொல்காப்பியர் ஆண்டுக் கூறாமை நினையத்தக்கது. எனினும் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் (சிவலிங்கனார் 1986:38-9) இடை. 3 ஆம் நூற்பா உரையிலேயே இடைச்சொல் இடை வருதலேயன்றி முன்னும் பின்னும் பிறவாறும் வரும் என உரைத்துள்ளது பொருத்தமுடையதன்று.

                இடைச்சொல் என்பது பெயர்ச்சொல், வினைச்சொற்களோடு வழக்குப்பெறும். தாமாக நடக்கும் இயல்புடையனவன்று என்பது தொல்காப்பியக் கருத்து. இதனை,
இடையெனப் படுவ பெயரொடும் வினையொடு
      நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே”  (தொல். இடை. 1)
எனவரும் நூற்பாவால் அறியலாம். சொல் என்பது பெயர், வினை ஆகிய இரண்டே என்று அறிஞா; கூறுவர். (தொல்.பெய.4), இடைச்சொல் உரிச்சொல் ஆகியன அவற்றினை இடமாகக் கொண்டு தோன்றும் என்பர் (தொல்.பெய. 5) எனத் தம் முன்னோர் கருத்தை எடுத்துரைப்பார் தொல்காப்பியர்.

இடைச்சொல் வகைகள்
                இடைச்சொற்கள் ஏழுவகை இயல்பினை உடையனவாக அமையும் என்பர் அவையாவன: 1. புணர்ச்சி நிலையில் அவற்றின் பொருள் நிலைக்கு உதவுவன. 2. ஒரு செயலின் நிகழ்வைக் காட்டும்போது வினைச்சொல்லின் காலங்காட்டும் உருபாக வருவன. 3. வேற்றுமை உருபுகளாக வருவன. 4. அசைநிலைச் சொற்களாக வருவன. 5. இசைநிறைச் சொற்களாக வருவன. 6. இடம்நோக்கிய குறிப்புக்களால் பொருளுணர்த்துவன. 7. ஒப்பில் போலிகளாக வருவன.

இடையியற்கண் கூறப்பெற்ற இடைச்சொல் வகைகள்     
                புணர்ச்சியின்போது பொருள் நிலைக்கு உதவுவன சாரியைகள் என்பது இளம்பூரணர் முதலாய உரைக்காரர் கருத்து (சிவலிங்கனார் 1986: 18), மேலும் சாரியைகள், வினைமுற்று விகுதிகள், வேற்றுமை உருபுகள், அசைநிலைக் கிளவிகள் ஆகியன நீங்கலான மூன்றும் தொல்காப்பிய இடையியலில் கூறப்படுகின்றன என்பர். அம்மூன்றாவன:1. இசைநிறைகள் 2. குறிப்பில் பொருள் தருவன 3. ஒப்பில் வழியால் பொருள் செய்வன (மேலது: 19), 1. அசைநிலைகள் 2. இசைநிறைகள் 3. குறிப்பால் பொருள் தருவன ஆகிய மூன்றே இடையியலில் கூறப்படுவன. ஒப்பில் வழியால் பொருள் செய்வன பின்னர் உணர்த்தப்படும் என்பது சேனாவரையர் கருத்து (மேலது: 22). தெய்வச்சிலையாரோ, புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவுவன, வினைசெயல் மருங்கில் காலமொடுவருவன, வேற்றுமை உருபாவன ஆகியன நீங்கலான நான்கும் இடையியலில் கூறப்பட்டுள்ளன என்பர் (மேலது: 24). ஒப்பில் வழியால் பொருளுணர்த்துவன உவமஉருபுகளன்று என்பதை, “குறிப்பினால் வருதலின்றிப் பொருத்தம் இல்லாதவிடத்துப் பொருள் உணர்த்துவன” (மேலது: 24) என அவர் விளக்குவதால் அறியலாம். நச்சினார்க்கினியர், கல்லாடர், வெள்ளைவாரணர், பாலசுந்தரம் ஆகியோர் சேனாவரையர் கருத்தினையே மொழிந்துள்ளனர் (மேலது: 25-37). மோ. இசரயேலும் இக்கருத்தினரே (1977: 6). இவற்றைத் தொகுத்து நோக்கும்போது தொல்காப்பிய இடையியலில் கூறப்பட்டுள்ள இடைச்சொல் வகைகள் எவையென்பதில் உரைகாரர்களிடையே கருத்துவேறுபாடுகள் நிலவுவதைக் காணமுடிகின்றது.

                தொல்காப்பிய இடையியலில் வேற்றுமை உருபுகள் என்ற ஒரு வகை நீங்கலான ஆறு வகைகளும் கூறப்பட்டுள்ளன என்பதை அவ்வியல் நூற்பாக்களைக் காணும்போது உணரமுடிகின்றது. இதனைப் பின்வரும் சான்றுகளால் அறியலாம்.

1.             புணர்ச்சி நிலையில் அவற்றின் பொருள் நிலைக்கு உதவுவனவற்றுக்குச் சான்று நூற்பா வருமாறு:
எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும்
தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே”  (இடை. 35)
2.             வினைசெயல் மருங்கின் காலமொடு வருவனவற்றுக்குச் சான்று:
இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
      பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே”  (இடை. 22)
3.             அசை நிலை பற்றிய நூற்பாவுக்குச் சான்று:
 “யா, கா,
      பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம்  
ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி” (இடை.31)
4.             இசைநிறை பற்றிய நூற்பா:
ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை
ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப”  (இடை.24)
5.             தத்தம் குறிப்பில் பொருள் செய்குவனவற்றுக்கு நூற்பா:
 “எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் என்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே” (இடை.7)
6.             ஒப்பில் வழியால் பொருள் செய்குவன பற்றிய நூற்பா:
ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும்”  (இடை.30)

வேற்றுமை உருபுகள் பற்றிய செய்திகள் எழுத்ததிகாரப் புணரியல், சொல்லதிகார வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல் ஆகிய இயல்களில் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியர் ரியலிலேயே ஒரு பொருள் பற்றிய கருத்துக்களை விளக்குவதோடு, பல்வேறு இயல்களிலும் ஒரோவழி ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களிலும் எடுத்துரைக்கும் இயல்புடையவர் (ஆ.மணி 2010:1849-1855). அந்நெறியே இடைச்சொற்கள் பற்றிய கருத்தியலிலும் ஆளுமை பெற்றுள்ளது எனலாம். தொல்காப்பியக் கருத்தோட்டத்தை அடையாளங் காணுவதில் உள்ள மயங்கங்களே தொல்காப்பியக் கருத்தியலுக்கு மாறான உரைகளும் ஆய்வுகளும் வெளிவரக் காரணங்கள் எனலாம். இனி, இடைச்சொற்களின் வகைகளைச் சான்றுகளுடன் விளக்குவோம்.

1. புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவுவன
                புணர்ச்சி நிலையில் பொருள் தெளிவுக்கு உதவுவன சாரியை, எழுத்தின் வகைகளான புணர்ச்சியெழுத்து, உடம்படுமெய் முதலியனவாகும். புணர்ச்சிக்கண் பொருள் நிலைக்கு உதவுவனவாக வருவனவே இங்குக் கூறப்பட்டுள்ளன. அசைகளாக, இசைநிரப்பிகளாக பிறவாறாக வருவன தனித்துக் கூறப்பட்டுள்ளவையாதலின் அவற்றை இங்கு விலக்கவேண்டும் என்ற கருத்து பொருள் நிலைக்கு உதவுவன என்ற தொல்காப்பியத் தொடரால் தெளிவாகும். புணர்ச்சி என்றமையால் அகப்புணர்ச்சி, புறப்புணர்ச்சி இரண்டும் கொள்க.

                அகப்புணர்ச்சியாவது ஒரு சொல்லுக்குள் அமையும் புணர்ச்சி. சொல்லானது ஓரெழுத்தொருமொழி: அதாவது ஓர் எழுத்தே ஒரு சொல்லாக, மொழியாக வருவது. சான்று: தீ, ஆ(பசு), வா, போ, பூ போல்வன. ஈரெழுத்தொருமொழி : அதாவது இரண்டு எழுத்துக்கள் இணைந்து ஒரு சொல்லாவன. சான்று : வீடு, கடை, நில், செல், இசை, சொல், மொழி போல்வன. தொடர்மொழி : அதாவது இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் இணைந்து ஒரு சொல்லாவன. சான்று: அகம், புறம், பொருள், புணர்ச்சி, புணர்மொழி, உடம்படுமெய் போல்வன.

                ஒன்று, இரண்டு, பல என்பது தமிழ்வழக்கு. அதனையே ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி என்ற தொல்காப்பியப் பகுப்புமுறை காட்டுகின்றது.

                அகப்புணர்ச்சியானது இம்மூவகை மொழிகளிலும் சாரியைகள், வேற்றுமை உருபுகள், விகுதிகள் போல்வன வந்து இணைவதால் நிகழுகின்றது.

சான்று:            கடை  + கு =  கடைக்கு    
 
                புறப்புணர்ச்சியாவது மேற்கண்ட மூவகை மொழிகளின் பின்னரும் மற்றொரு சொல் வந்து இணைவதால் நிகழுவதாகும்.

சான்று:      தீ    +  சொல்   =              தீச்சொல்
                                மரம்  +  வேர்            =              மரவேர்
                                பொன் + தொடி   =              பொற்றொடி

                இனி, புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவும் சாரியை, எழுத்தின் வகைகளான புணர்ச்சியெழுத்து, உடம்படுமெய் முதலியவற்றைச் சான்றுகளுடன் காணலாம்.

சாரியை : மடம் + சாமியார்         =  மடத்துச்சாமியார்
(மடச்சாமியார் எனில் வேறுபொருள் உணர்த்துதல் காண்க)

புணர்ச்சியெழுத்து :       இடை +     சொல் = இடைச்சொல்        

உடம்படுமெய் :    மெய் + ஈறு  =           மெய்யீறு (புணரி.2)
                          ஆ    + ஈர்      =            ஆயீர்      (தொகை.9)
(ஆ - மேற்சொன்ன ஈர் - இரண்டு)

இணைப்பிடைச்சொல் : நான் கடைக்குச் சென்றேன். ஆதலின் புத்தகம் வாங்கினேன். (ஆதலின் - இணைப்பிடைச்சொல். இது தொடரியல் நிலையில் அமைவது).

                                “ அவன் அறிவு ஆற்ற லறியும் ஆகலின்
                                 ஏற்றற் கண்ணும்” (கற்.6)  -  (ஆகலின் - இணைப்பிடைச் சொல்)

2. வினைசெயல் மருங்கின் காலமொடு வருவன
                அன், ஆன், அள், ஆள் முதலான வினை விகுதிகளே வினைசெயல் மருங்கின் காலமொடு வருவன என இளம்பூரணரும் (சிவலிங்கனார் 1986:18), வினைச் சொல்லின் செயலடியைக் குறித்து வரும் அடிச்சொல்லினைத் தழுவி வரும் கால இடைநிலைகளாகிய இடைச்சொற்கள் என ஆதித்தரும் (சிவலிங்கனார் 1986:29) வினைச்சொல் முடிவு பெறுமிடத்தில் வரும் காலங்காட்டும் சொல்லும், பால் காட்டும் சொல்லும் எனத் தெய்வச்சிலையாரும், நச்சினார்க்கினியரும், கல்லாடரும், வெள்ளைவாரணரும், சிவலிங்கனாரும் (மேலது: 22-32), திணை, பால், இடம் காட்டும் இறுதியிடைச்  சொற்களும் காலங்காட்டும் இடைச்சொற்களும் என்று கூறி, வினைசெயல் மருங்கில் வருவன, காலமொடு வருவன என இரண்டாகப் பிரித்துப் பாலசுந்தரமும் (மேலது: 34-5) உரைத்துள்ளனர். இவற்றைத் தொகுத்து நோக்க வினை விகுதிகளாக வருவனவும் காலங்காட்டும் இடைநிலைகளும் இடைச்சொற்கள் என்ற உரைகாரர் கருத்தை அறியமுடிகின்றது. இளம்பூரணர் கால இடைநிலைகளைக் கூறவில்லை. பிறர் இரண்டையும் கூறியுள்ளனர்.

                வினைச் சொல் என்ற ஒரு வகைமைச் சொற்களின் கண்ணே அவற்றைப் பகுத்தறியும் வகையில் தொல்காப்பியர் நூற்பாச் செய்திருப்பதை இந்நூற்பாவடி காட்டுகின்றது. இடைச்சொல் என்பது பெயர் வினைகளைச் சார்ந்து வரும் என்ற தொல்காப்பியக் கருத்து (இடை. 1). இங்கு நினையத்தக்கது. வினை, குறிப்பு முதலியவற்றைச் சார்ந்து என, என்று ஆகிய இடைச்சொற்கள் பொருள் உணர்த்தும் என்ற கருத்தும் (இடை. 10,11) குறிப்பிடத்தக்கது.

                வினைச்சொல் காலமொடு தோன்றும் (வினை. 4) என்பார் தொல்காப்பியர். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களையும் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் வினைச்சொல் காட்டும் (வினை. 3). உயர்திணையில் ஈற்றிடைச் சொற்களால் பன்மை, ஒருமை என்ற பால் வேறுபாடு அறியப்பட்ட தெரிநிலை வினைச்சொற்களோடு காலத்தைக் குறிப்பாகக் காட்டும் குறிப்பு வினைச்சொற்கள் வேறுபாடற்றவை என்ற கருத்துடைய நூற்பாவில் வரும் காலக்கிளவி (வினை. 18) என்ற தொடர் நோக்கத்தக்கது. காலமொடு வரூஉம் வினைச்சொல் (வினை. 4) காலக்கிளவியொடு முடியும் (வினை. 10), காலம் குறிப்பொடு தோன்றும் (வினை. 16), குறிப்பே காலம் (வினை. 17), காலக்கிளவி (வினை. 24), நிகழும் காலத்துச் செய்யும் என்னும் கிளவியொடு (வினை. 30), காலமும் (வினை. 37), இறந்த காலம், வாராக்காலம் (வினை. 42), முந்நிலைக் காலமும் (வினை. 43), வாராக் காலத்தும் நிகழும் காலத்தும், இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் (வினை. 44) வாராக்காலத்து வினைச்சொல் கிளவி (வினை. 48), இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் (வினை. 50), ஏனைக்காலமும் (வினை. 51) எனவரும் தொல்காப்பியத் தொடர்கள் காலக்குறிப்பு பற்றிய செய்தியை வலியுறுத்தக் காணலாம். காலமொடு தோன்றுதலே வினைச்சொல்லின் சிறப்பிலக்கணம் (வினை. 1) என்பதை ஈண்டு நினைவுகூர்க.

                வினை செயல் மருங்காவது வினையின் செயற்பகுதியை உணர்த்தும் பகுதியாகும். உண்டான் என்பதில் உண் என்பது வினை செயல் மருங்காகும். உரைகாரர்களில் இளம்பூரணர் பாலீறுகளை மட்டுமே கூற, தெய்வச்சிலையார் கால இடைநிலைகள், பால்காட்டும் சொற்கள் இரண்டையும் கூறுகின்றார். நச்சினார்க்கினியர் காலங்காட்டும் இடைச்சொற்களோடு பாலும் இடமும் காட்டும் இடைச்சொற்களையும் கூறுகின்றார். கல்லாடர் காலங்காட்டும் சொற்களோடு கூடித் தாம் பால் காட்டும் சொற்களாய் வருவன என்கின்றார். வினைச்சொல்லை முதல் நிலையும் இறுதிநிலையும் இடைநிலையுமாகப் பிரித்துச் செய்கை செய்யுமிடத்துக் காலம் காட்டியும் பால் காட்டியும் அதனகத்து உறுப்பாய் நிற்பன என்கின்றார் வெள்ளைவாரணர். வினைசெயல் மருங்கின் இடைச்சொல்லாக வருவன விகுதி, இடைநிலை, சாரியை என்பன என்பார் சிவலிங்கனார் (1986 : 18-32).

                பிற்கால இலக்கண நூல்களில் நேமிநாதம் வினைச்சொற்கீறாதல் (நேமி. சொல். 50) என வினை விகுதிகளையே குறிக்கின்றது. நன்னூல் (420), இலக்கண விளக்கம் (251), தொன்னூல் விளக்கம் (130), முத்துவீரியம் (ஒழிபியல் 1) ஆகியன வினை என்றே ஆளுகின்றன. உரைகாரர்கள் அதனை வினையுருபுகள் என்று கூறியுள்ளனர். நன்னூல் உரைகாரராகிய சங்கர நமச்சிவாயர் இடைநிலை, விகுதி முதலிய வினையுருபுகளும் என்கின்றார்.

                தொல்காப்பியர் காலமொடு வருநவும் என்று தெளிவுபடக் கூறிய பின்னரும் உரையாசிரியர்கள் காலங்காட்டும் இடைநிலையும் பால்காட்டும் விகுதியும் என விகுதியையும் சோ;த்துக்கூறக் காரணம் என்ன? என்பதைக் காண்போம். வினைச்சொல் விகுதியாக வருவனவான அன், ஆன் போல்வனவற்றை எதில் அடக்குவது என்ற சிக்கலே உரையாசிரியர் இவ்வாறு விகுதிகளை இங்குச் சேர்த்துக் கூறக் காரணமாகும். இவ்வாறு கொண்டால் ஒரு சிக்கல் எழுகின்றது. அதாவது அறிஞன் , அறி + ஞ் + அன் என்பதில் அன் என்ற விகுதியை எங்கு வைப்பது என்பதும் சிந்திக்கத்தக்கது. உரையாசிரியர்கள் இதுபற்றிச் சிந்தித்ததாகத் தெரியவில்லை. எனவே, வினைசெயல் மருங்கில் காலங்காட்டும் சொற்களாக வருவனவே இங்குத் தொல்காப்பியரால் கூறப்பட்டவை எனக் கொள்லாம். எனினும், காலமொடு வருந என்பதைக் கபிலரொடு வந்தார் என்ற தொடரைப் பொருள் கொள்வதுபோலப் பொருள் கொள்ளவும் இயலும். அதாவது கபிலரொடு வேறு ஒருவரும் வந்தார் எனக் கொள்வதுபோல ஈண்டும் காலக் கிளவியொடு வருவனவாகிய பிறவும் எனக் கொள்ளலாம். காலமுணர்த்தும் இடைநிலைகளொடு வரும் விகுதிகளும் என வினைசெயல் மருங்கின் காலமொடு வருந என்ற தொடருக்குப் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது. பெயர்ச்சொற்களையும் இவ்வாறே பெயரடி ( அறி) + புணர்ச்சியெழுத்து (ஞ்) + விகுதி ( அன்) எனப் பகுத்துக் கொள்ளலாம். தொல்காப்பியர் பெயர்ச்சொற்களைப் பகுத்து விளக்குவதைக் கிளவியாக்கத்தின் 5,6,7,8,9,10,11 ஆகிய நூற்பாக்களால் அறியலாம். இதன்மூலம் பெயரடி, பெயர்ப்பாலீறு பற்றிய சிந்தனை தொல்காப்பியருக்கு இருந்துள்ளதை உணரலாம். வினையின் தோன்றும் பாலறி கிளவியும், பெயரின் தோன்றும் பாலறி கிளவியும் ( கிள.11) என்ற தொல்காப்பியத் தொடர் மேற்கருத்தினை வலியுறுத்தக் காணலாம். வினைப் பாலீறு, பெயர்ப் பாலீறு ஆகியவற்றை எச்சொல் வகையில் அடக்குவதெனத் தொல்காப்பியர் கூறாதது ஏன் என்பது சிந்தித்தற்குரியது. மேற்கண்டவாறு கால இடைநிலைகளொடு வினைவிகுதி வரும் எனக் கொண்டதுபோலப் பெயர்ப்பாலீறுகளையும் கொண்டால் மேற்சொன்ன சிக்கல் தீரும் என்பர்.

                வினைசெயல் மருங்கின் காலமொடு வருவனவற்றுக்குச் சான்று காணலாம்.
                                “வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கி”  (களவி.20)
வந்தனன் என்பதை வா + ந் + த் + அன் + அன் எனப் பிரித்தால் த் என்பது இறந்தகாலம் காட்டியது.

3. வேற்றுமைப் பொருள் வயின் உருபாகுவன
                வேற்றுமைப் பொருள் வயின் உருபாகுவன என்பது வேற்றுமை உருபுகளைக் குறிப்பதாகும். ஐ முதல் கண் வரையுள்ள உருபுகள் இதில் அடங்கும். சொல்லுருபுகளும் (உடைய என்னுமாப்போல வருவன) இதன்கண் அடங்கும் என்பர் உரைகாரர்.

சான்றுகள்:
                                                கண்ணனைக் கண்டேன்               -    ஐ
                                                வாளால் வெட்டினான்                  -    ஆல்
                                                கூலிக்கு உழைத்தான்                  -    கு
                                                தில்லையில் விளங்கும் கூத்தன்        -    இல்
                                                எனது மோதிரம்                     -     அது
                                                வீட்டின்கண் இருந்தான்               -    கண்

வருவிசைப் புனலைக் கற்சிறை போல  (புறத். 7)          -
தன்னொடு சிவணிய, ஏனோர்                     (அகத். 29)       - ஒடு
உயர்ந்தோர்க்கு உரிய ஒத்தினான     (அகத். 33)            - கு
தீர்த்தவேலின், பேஎத்த மனைவி      (புறத். 19)              - இன்
இதனது இது எனும்               (வேற். 18)                 - அது
மனைவிகண் தோன்றும்            (பொருள். 29)       - கண்

4. அசைநிலைக் கிளவி ஆகி வருவன
                யாப்பு நிலையில் செய்யுள் கட்டுமானத்திற்கு உதவும் வகையில் அசைநிலைச் சொற்களாக வருவன இவ்வகையினவாகும். தமக்கெனத் தனிப்பொருளின்றி வருவன அசைநிலைகள் என்பது உரைகாரர் கருத்து. உரையாசிரியர்கள் தனிப்பொருள் எனக் கூறுவது அடிப்படைப் பொருள் எனக் கொள்ள வேண்டும். ஏனெனில் அசைநிலையானது யாப்பமைதியில் சீர், தளை, அடி சிதையாமல் காப்பதாகிய இலக்கணப்பொருள் நிலையில் உதவுகின்றது. எனவே, தனிப்பொருள் என்பது அடிப்படைப்பொருள் எனலாம்.
சான்று :   எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே (மொழி. 28)  மார் - அசைநிலை.

5. இசைநிறைக் கிளவி ஆகி வருவன
                செய்யுளின்கண் இசைநிறைத்தலே பொருளாகக் கொண்டு வருவன இவ்வகை இடைச்சொற்களாம். அசைநிலை என்பது யாப்புப்பொருண்மைக்கு உதவுவதாகும். இசைநிறை என்பது சொல்லுவோன் உணர்ச்சியை வெளிப்படுத்த வருகின்ற ஒலிக்குறிப்புச் சொற்களாகும். முந்தைய உரைகாரர்கள் ஒலிக்குறிப்போடு பிற சொற்களையும் சோ;த்துக் கூறுவர். எனினும் ஒலிக்குறிப்புச் சொற்களைமட்டும் கொள்ளுவது பொருத்தமுடையது.

சான்றுகள் :   ஐயோ எனில் யான் புலியஞ்சுவலே (புறநா. 235)  ஐயோ - ஒலிக்குறிப்பு - துன்பத்தை உணர்த்துவது.
பளீர், பளபளக்குது என்னுமாப்போல உரைநடையில், பேச்சில் வருவனவும் இவ்வகையினவே.

6. தத்தம் குறிப்பில் பொருள் செய்குவன
                குறிப்பினால் பொருள் உணர்த்தும் குறிப்புமொழி, உள்ளுறை ஆகியன வேறு; இங்குக் கூறப்படுவன தத்தம் குறிப்பில் பொருள் உணர்த்துவனவாம். முன்னோரால் இன்ன குறிப்புடையதெனக் கூறப்பட்டுள்ள இடைச்சொற்கள் இவ்வகையினவாகும். பொருள் உடைய சொற்களாக இவை அமையினும் பெயரோடும் வினையொடும் சேர்ந்து அவற்றுக்குத்தகத் தம்முடைய குறிப்புப்பொருளை உணர்த்துவனவாகும்.

                தத்தம் குறிப்பு என்பதற்குச் சார்ந்த சொல்லின் குறிப்பு எனத் தெய்வச்சிலையார் உரை செய்துள்ளார் (சிவலிங்கனார் 1986 : 23).

                ஒரு பொருள் தரும் எற்று (இறந்தற்பொருட்டு), மற்றையது (இனமான பிறிதொன்று), மன்ற (குற்றம்), தஞ்சம் (எளிமை), கொல்(ஐயம்), எல்(இலக்கம்) ஆகியனவும், கழிவு, ஆக்கம், ஒழியிசை  என்று முப்பொருள் தரும் மன் போன்ற இடைச்சொற்களும் தொல்காப்பியரால் கூறப்பட்டுள்ளன.

சான்றுகள்:
                                சிறியகள் பெறினே எமக்கீயு மன்னே (புறநா.235) - கழிவுப்பொருள்
அதுமன் எம்பரிசில் ஆவியர்கோவே (புறநா.147) - ஆக்கப்பொருள்.
கூரியதோர் வாள்மன்   - ஒழியிசைப்பொருள். அதாவது, இது கூரியவாளன்று
என்ற ஒழியிசைப் பொருளை உணர்த்துகின்றது.

7. ஒப்பில் வழியால் பொருள் செய்குவன
                உரையாசிரியர்களிலும் ஆய்வாளர்களிலும் பெரும்பான்மையோர் ஒப்பில் வழியால் பொருள் செய்குந என்பதற்கு உவம உருபுகளையே தந்து பொருள் கூறியுள்ளனர். தொல்காப்பியர் ஒப்புவழியால் என்று தொடராட்சி செய்திருந்தால், அது உவம உருபுகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஒப்பில் வழி என்பதால் இது உவம உருபுகளைக் குறிப்பதன்று எனக் கொள்வதே பொருத்தமுடையது. ஒப்பில் போலியும்’ (இடை. 30) என்ற தொல்காப்பிய ஆட்சியும் மேற்கருத்திற்கு அரணாகக் காணலாம். தெய்வச்சிலையாரும் குறிப்பினால் வருதலின்றிப் பொருத்தம் இல்லாதவிடத்துப் பொருள் உணர்த்துவன எனக் கூறுவதும் (சிவலிங்கனார் 1986: 23) நினையத்தகும். மேலும் செய்யுள் இறுதிப்போலி மொழிவயின், னகார மகாரம் ஈறொற்றாகும்” (மொழி. 18) என்ற நூற்பாவில் போலி என்பதற்குப் போலும் என்ற சொல் எனத் தமிழண்ணல் (2008: 19) உரைப்பது காண்க. இலக்குவனார், ஆல்பர்ட் ஆகியோரும் போல் (pழட) என்றே மொழிபெயர்த்துள்ளதும் (சிவலிங்கனார் 1986: 129) குறிப்பிடத்தக்கது.
சான்றுகள் :
                                “புணைகை விட்டுப் புனலொடு ஒழுகின்
                                ஆண்டும் வருகுவள் போலும்”        (குறுந்.222)  போலும் - ஒப்பில் போலியாக வருவது.

அவன் வந்தான் போலும் - இங்குப் போலும் என்பது ஐயப்பாட்டுப் பொருளைத் தந்தது.
                ஒப்பில்போலியை முத்துவீரியம் உரையசையாகக் கொண்டுள்ளது (முத்து.ஓ. 23).

முடிபுகள்
1.             இடைச்சொல் என்பது ஒரு சொல்லின் இடையே அதாவது உள்ளே வரும் சொல்லாகவும், புணர்ச்சியில் இரு சொற்களுக்கிடையே பொருந்தும் சொல்லாகவும் வரும்.
2.             இடைச்சொல் என்பதில் இடை என்பதற்கு நடுவே என்பது பொருளன்று; உள்ளே என்பதே பொருந்திய பொருளாகும்.
3.             தொல்காப்பிய இடையியல் வேற்றுமைப் பொருள்வரின் உருபாகுந என்ற ஒரு இடைச்சொல் வகை நீங்கலான பிற ஆறுவகை இடைச்சொற்களையும் கூறியுள்ளது. உரைகாரர்கள் இக்கருத்தில் முரண்பட்டுள்ளனர்.
4.             இடைச்சொல்லின் ஏழு வகைகளுக்கும் உரையாசிரியர், ஆய்வாளர் கூறிய கருத்துக்களின் பொருத்தமின்மை இவ்வுரையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
5.             உரையாசிரியர் காட்டாத சில சான்றுகளும் இவண் தரப்பட்டுள்ளன.


துணை நூல்கள்
                அறவாணன் க.ப. தாயம்மாள் அறவாணன். 1975. தொல்காப்பியக் களஞ்சியம். சென்னை : பாரி நிலையம்.
இசரயேல். மோ.1977. இடையும் உரியும். மதுரை : சா;வோதய இலக்கியப் பண்ணை.
                இராசம். மர்ரே (பதி.ஆ.). 1960 தொல்காப்பியம். சென்னை : சென்ட்ரல் ஆர்ட் அச்சுக்கூடம்.
சிவலிங்கனார் ஆ.(பதி.ஆ). 1986. தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - இடையியல் - உரைவளம். சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
சீனிவாசன். ரா. 2005. மொழியியல். சென்னை : முல்லை நிலையம்.
                தண்டபாணி தேசிகர்.ச.(பதி.ஆ.). 1998 (மூன்றாம் பதிப்பு). நன்னூல் -விருத்தியுரை. சென்னை : பாரிநிலையம்.
                தமிழண்ணல் (உரை ஆ.). 1993. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம். சென்னை : மணிவாசகர் பதிப்பகம்.
                தமிழண்ணல் (உரை ஆ.). 2003. (மூன்றாம் பதிப்பு). தொல்காப்பியம் -சொல்லதிகாரம். சென்னை : மணிவாசகர் பதிப்பகம்.
                தமிழண்ணல் (உரை ஆ.). 2003. நன்னூல் எழுத்ததிகாரம். மதுரை : மீனாட்சி புத்தகநிலையம்.
தமிழண்ணல் (உரை ஆ.). 2008 (இரண்டாம் பதிப்பு). நன்னூல் - சொல்லதிகாரம். மதுரை : மீனாட்சி புத்தகநிலையம்.
தமிழண்ணல் (உரை ஆ.). 2008. தொல்காப்பியம். மதுரை : மீனாட்சி புத்தக நிலையம்.
மணி. ஆ. (க.ஆ.). 2010. தொல்காப்பியக் கருத்தியல் புலப்பாடு நெறிகள்ஆய்வுக்கோவை - 4, இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை, பக். 1849 – 1855.
வேல்முருகன். ப. 2006. தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள் - ஒரு மதிப்பீடு. சென்னை : தி பார்க்கர்.
Natarajan.A.G. etal. 2010. Descriptive strategies of phonology and morphology – as conceived in the Traditional Grammars Tolkappiyan, Veeracholiyan and Naninathan – Seminar Papers 2010: Annamalai University.
(குறிப்பு : இக்கட்டுரை வளமுறும் வகையில் கலந்துரையாடலின்போது கருத்துக்களையும் சான்றுகளையும் கூறியுதவிய முனைவர் தி. செல்வம் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக).

இணைப்பு - தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் இடைச்சொற்கள்

1. தொல்காப்பியத்தில் மட்டும் கூறப்படுவன
                1. கொன் 2. எற்று 3. மன்ற 4. தஞ்சம் 5. எல் 6. ர் 7. 8. ஆக 9. ஆகல் 10. என்பது 11. உந்து 12. கண்டீரோ 13. கொண்டீர் 14. சென்றதே 15. போயிற்றே. 16. கோட்டை 17. நின்றை 18. காத்தை 19. கண்டை 20. நன்றே 21. அன்றே 22. அந்தோ 23. அன்னோ. (16 முதல் 23வரை உள்ளவை எச்சவியலில் கூறப்பட்டவை).

2. நன்னூலில் மட்டும் இடம்பெறுவன
                1. அத்தை    2. இத்தை 3. வாழிய 4. மாள 5. ஈக 6.யாழ 7. ஓரும் 8. இருந்து 9. இட்டு 10. அன்றும் 11. ஆம் 12. தாம் 13. தான் 14. கின்று 15. தெய்ய.

3. தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் கூறப்படுவன
                1.மன் 2. தில் 3. உம் 4. 5. 6. என 7. என்று 8. மற்று 9. மற்றையது 10. அந்தில் 11. கொல் 12. குரை 13. மா 14. அம்ம 15. ஆங்க 16. போலும் 17. எனா 18. என்றா 19. ஒரு 20.மியா 21. இக 22. மோ 23. மதி 24. இகும் 25. சின் 26. யா 27. கா 28. பிற 29. பிறக்கு 30. அரோ 31. போ 32. மாது.
                தொல்காப்பியர் கூறிய இடைச்சொற்கள் -  55
                நன்னூலார் கூறிய இடைச்சொற்கள்     - 48
                தொல்காப்பியர் கூறியும் நன்னூலார் கூறாதவை  - 23
                நன்னூலார் கூடுதலாகக் கூறியவை     - 16
இருவரும் கூறியவை -   32
(நன்றி : மோ. இசரயேல் 1977. இடையும் உரியும். மதுரை : சர்வோதய இலக்கியப் பண்ணை. (பக். 7-8).கருத்துகள் இல்லை: